கொரோனா ஊரடங்கால் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் களையிழந்த விநாயகர் சதுர்த்தி விழா

கொரோனா ஊரடங்கு காரணமாக திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்திவிழா களையிழந்தது.

Update: 2020-08-22 23:00 GMT
திருச்சி, 

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபடக்கூடாது என்றும், விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

திருச்சி மலைக்கோட்டை கோவிலில் ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக நடைபெறும். மலைக்கோட்டை கோவிலில் உச்சிப்பிள்ளையாருக்கும், கீழே அமைந்துள்ள மாணிக்க விநாயகருக்கும் தலா 75 கிலோ வீதம் மொத்தம் 150 கிலோ எடை கொண்ட ராட்சத கொழுக்கட்டையை படையலிட்டு நெய்வேத்தியம் செய்யப்படும். பின்னர் அந்த கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

சிறப்பு அபிஷேகம்

ஆனால் இந்தாண்டு கொரோனா அச்சம் காரணமாக மலைக்கோட்டை கோவிலில் ராட்சத கொழுக்கட்டை படையல் நடைபெறவில்லை. விநாயகர் சதுர்த்தி தினமான நேற்று காலை மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மலைக்கோட்டையின் கீழே அமைந்துள்ள மாணிக்க விநாயகர் கோவிலின் முன்பு பல்வேறு பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அங்கு சிறியஅளவில் செய்யப்பட்ட கொழுக்கட்டை விநாயகருக்கு படைக்கப்பட்டது.

கொரோனா ஊரடங்கு காரணமாக கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் நேற்று மலைக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழா களையிழந்து காணப்பட்டது.

மேலும் செய்திகள்