விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் மக்கள் சமூக பொறுப்புகளை மறந்து விடக்கூடாது முதல்-மந்திரி வேண்டுகோள்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் மக்கள் சமூக பொறுப்புகளை மறந்து விடக்கூடாது என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்தார்.

Update: 2020-08-23 23:53 GMT
மும்பை, 

விநாயகர் சதுர்த்தி திருவிழா நேற்று முன்தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. மராட்டியத்தில் 11 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி இந்த ஆண்டு கொரோனா தொற்று நோய் காரணமாக எளிமையான முறையில் கொண்டாடப்படுகிறது.

இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் தனது அதிகாரப்பூர்வ இல்லமான ‘வர்ஷா’ பங்களாவில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மறந்து விடக்கூடாது

விநாயகர் தொற்று நோயை நீக்கி மகிழ்ச்சியை தருபவர். இந்த சந்தர்ப்பத்தில் தனது பக்தர்கள் எப்படி சமூக பொறுப்பை உணர்ந்து தன்னை வரவேற்கிறார்கள் என்பதை அவர் கவனித்து வருகிறார்.

வழக்கமாக ஆடம்பரமாக விழா கொண்டாடப்படும். தற்போதைய சூழ்நிலையில் அவ்வாறு கொண்டாட முடியவில்லை. இது நமக்கு சோதனை. இந்த சந்தர்ப்பத்தில் பொதுமக்கள் தங்களது சமூக பொறுப்புகளை மறந்து விடக்கூடாது. முகக்கவசம் அணிவது, உடல் ரீதியான சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, கூட்டத்தை தவிர்ப்பது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது நமது சமூக பொறுப்புகளாக உள்ளன.

அனைவரின் நல்வாழ்வு, சிறந்த ஆரோக்கியம் மற்றும் தொற்று நோயை உலகத்தை விட்டு அகற்ற அதிசயம் நிகழ்த்துமாறு விநாயகரை வேண்டிக்கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்