குளிர்பதன கிடங்கில் அமோனியம் வாயு வெளியேறியதால் பரபரப்பு பொதுமக்கள், ஊழியர்கள் மூச்சுத்திணறலால் அவதி

சேலம் அருகே குளிர்பதன கிடங்கில் அமோனியம் வாயு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள், ஊழியர்கள் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டனர்.

Update: 2020-08-26 00:18 GMT
கொண்டலாம்பட்டி, 

சேலம் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் சேலம் அருகே உள்ள அமானி கொண்டலாம்பட்டி பகுதியில் குளிர்பதன கிடங்கு வைத்துள்ளார். இந்த கிடங்கில் 6 ஆயிரம் டன் அளவிற்கு தானியங்கள், பூ வகைகள் உள்ளிட்டவை பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. இங்கு ஆயிரம் கிலோ அமோனியம் வாயு நிரம்பிய தொட்டி ஒன்று உள்ளது. இதில் இருந்து 3 வால்வுகள் மூலம் குளிரூட்டப்பட்டு வருகிறது. இந்த கிடங்கில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலை அமோனியம் வாயு இயங்குவதற்கு பயன்படுத்தப்படும் எந்திரத்தில் ஆயில் மாற்றும் போது திடீரென அமோனியம் சிலிண்டரில் இருந்து வாயு வெளியேறியது. இதவனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அங்கிருந்து வேகமாக வெளியே ஓடினர். மேலும் அந்த வாயு அனைத்து பகுதிகளிலும் பரவியது.

பொதுமக்கள் அவதி

இதுகுறித்து செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் கலைச்செல்வன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் வீரர்கள் மின்சாரத்தை துண்டித்ததுடன் மூச்சுக்கருவியை பொருத்திக் கொண்டு உள்ளே சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி அமோனியம் வாயு வெளியேறும் வால்வை சரிசெய்தனர். மேலும் அங்கு தண்ணீரை கொண்டு குளிரூட்டப்பட்டது.

அமோனியம் வாயு வெளியேறியதால் ஊழியர்கள் மற்றும் அருகில் வசிக்கும் பொதுமக்கள் சிறிது நேரம் மூச்சுத்திணறலால் அவதியுற்றனர். மேலும் சரியான நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் சென்று வால்வை சரிசெய்ததால் பெரியளவில் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்