கொரோனா நிவாரணம் வழங்கக்கோரி நாராயணசாமியை முற்றுகையிட்ட விடுதலை சிறுத்தைகள்

முதல்-அமைச்சர் நாராயணசாமியை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-08-27 00:34 GMT
புதுச்சேரி,

புதுவையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும், மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்த வேண்டும், மக்களை விமர்சிக்கும் கவர்னர் கிரண்பெடி புதுச்சேரியை விட்டு வெளியேற வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்போவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அறிவித்திருந்தனர்.

அதன்படி அவர்கள் நேற்று புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு கூடினார்கள். அங்கு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகளின் துணைப்பொதுச்செயலாளர் பாவாணன் தலைமை தாங்கினார்.

அப்போது அவர்கள் போலீஸ் பாதுகாப்பினையும் மீறி தடுப்புகளை தள்ளிக்கொண்டு 2 பிரிவாக சட்டசபை நோக்கி வந்தனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினார்கள். சட்டசபையின் மெயின்கேட் பகுதியில் வந்து அமர்ந்த அவர்கள் புதுவை அரசு மற்றும் கவர்னர் கிரண்பெடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

அந்த நேரத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி காரில் தனது அலுவலகத்துக்கு வந்தார். அப்போது சட்டசபை முன்பு ரோட்டை மறித்தபடி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அமர்ந்திருந்ததால் அவரது கார் தொடர்ந்து செல்ல முடியவில்லை. இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி காரைவிட்டு இறங்கினார். அவரை முற்றுகையிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். அவர்களில் முக்கிய பிரமுகர்களை மட்டும் தன்னை சந்திக்க வருமாறு கூறிவிட்டு முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது அலுவலகத்துக்கு சென்றுவிட்டார்.

அதன்பின் பாவாணன் தலைமையில் நிர்வாகிகள் முதல்-அமைச்சர் நாராயணசாமியை அவரது அலுவலகத்துக்கு சென்று சந்தித்து பேசினார்கள். அப்போது கொரோனா தொற்று பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும், பரிசோதனை முடிவுகளை விரைவாக தெரிவிக்கவேண்டும், குடிசையில் வசிப்பவர்களை வீட்டில் தனிமைப்படுத்த முடியாது என்பதால் பொதுவான ஒரு இடத்தில் தங்கவைத்து சிகிச்சை அளிக்கவேண்டும், பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

இதற்கு விரைவாக நடவடிக்கை எடுப்பதாக முதல்-அமைச்சர் நாராயணசாமியும் உறுதியளித்தார்.

மேலும் செய்திகள்