சந்திராப்பூரில் சிறுத்தைப்புலி தாக்கி 5 வயது சிறுமி பலி

சந்திராப்பூரில் சிறுத்தைப்புலி தாக்கி 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.

Update: 2020-08-28 00:08 GMT
சந்திராப்பூர்,

சந்திராப்பூரை சேர்ந்தவர் தானேக்கர். மத்திய தொழிற்படை வீரரான இவர், அனல் மின் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் உள்ளார். மேலும் இவர் குடும்பத்துடன் அங்குள்ள காலனியில் வசித்து வருகிறார். இவரது மகள் லாவண்யா(வயது5).

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை சிறுமி லாவண்யா (வயது5) வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தாள். அப்போது, புதர்மறைவில் பதுங்கி இருந்த சிறுத்தைப்புலி ஒன்று திடீரென லாவண்யா மீது பாய்ந்து தாக்கியது. பின்னர் சிறுமியை கவ்வியபடி புதருக்குள் ஓடிமறைந்தது.

இந்தநிலையில் விளையாடிக்கொண்டிருந்த மகளை காணாமல் பதறிப்போன பெற்றோர் சிறுத்தைப்புலி கவ்விச்சென்றதை அறிந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில், சில அடி தூரத்தில் சிறுமி லாவண்யா ரத்தவெள்ளத்தில் கிடப்பதை வனத்துறையினர் கண்டறிந்தனர். உடனடியாக சிறுமி மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டாள். அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில் சிறுமி லாவண்யா ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து சிறுமியை தாக்கிக்கொன்ற சிறுத்தைப்புலியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து உள்ளனர்.

சிறுத்தைப்புலி தாக்கி சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்