இன்று முழு ஊரடங்கு: காய்கறி, இறைச்சி கடைகளில் குவிந்த மக்கள்

இன்று (ஞாயிற்றுக்கிழமை) தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதை முன்னிட்டு, காய்கறி, இறைச்சி கடைகளில் குவிந்த மக்கள் தங்களது வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.

Update: 2020-08-29 22:15 GMT
தூத்துக்குடி,

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கடந்த மாதத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமைதோறும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இதனை முன்னிட்டு, தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட் முன்பு, வ.உ.சி. கல்லூரி அருகில், புதிய பஸ் நிலையம் அருகில் ஆகிய இடங்களில் உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டுகளில் நேற்று பொதுமக்கள் குவிந்தனர். தங்களது வீடுகளுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை மொத்தமாக வாங்கி சென்றனர்.

இதேபோன்று ஆடு, கோழி உள்ளிட்ட இறைச்சி கடைகளிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்று, இறைச்சி வாங்கி சென்றனர். தூத்துக்குடி பாலவிநாயகர் கோவில் தெருவில் உள்ள மீன் கடைகளிலும் ஏராளமானவர்கள் ஆர்வமுடன் மீன்களை வாங்கி சென்றனர். தற்காலிக காய்கறி மார்க்கெட்டுகளிலும், இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

பொது இடங்களில் முக கவசம் அணியுமாறும், சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும் சுகாதார துறையினர் அறிவுறுத்தினர்.

மேலும் செய்திகள்