மாணவர் சேர்க்கைக்கு அரசு பள்ளிகளில் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர்கள் புகார் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

Update: 2020-08-29 22:30 GMT
நம்பியூர்,

நம்பியூர், எலத்தூர் பேரூராட்சி பகுதியை சேர்ந்த பெண்களுக்கு விலையில்லா கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு, 640 பெண்களுக்கு விலையில்லா கோழிக்குஞ்சுகளை வழங்கினார். தொடர்ந்து எலத்தூர் பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அமைச்சர் முன்னிலையில் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். இதில் பேரூராட்சி அ.தி.மு.க. செயலாளர் கருப்பண கவுண்டர், அரசு வக்கீல் கங்காதரன், சேரன், சரவணன், முருகேசன், செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு குறித்து முதல்-அமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுப்பார். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு எவ்வித கட்டணமும் வசூல் செய்யப்படவில்லை அரசு பள்ளியில் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக பெற்றோர்கள் புகார் அளித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவர்கள் சேர்க்கைக்காகவும், மாணவர்களுக்கு வழங்கப்படும் பொருட் களுக்காகவும் மாணவர்கள் எண்ணிக்கையை பொறுத்து ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்.

குழந்தை தொழிலாளர்களை நல்வழிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 1 லட்சத்து 72 ஆயிரம் குழந்தைகள் கூடுதலாக 1-ம் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். செப்டம்பர் மாதம் வரையிலும் சேர்க்கை நடைபெறும் என்பதால் கூடுதல் சேர்க்கைக்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கு ஏற்ப ஒவ்வொரு வகுப்பிற்கும் 20 ஆயிரம் புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளது. தனியார் பள்ளிகள் வாங்கிச்செல்வதால் கூடுதலாகவே பாடப்புத்தகங்கள் இருப்பில் வைத்துள்ளோம். இவ்வாறு அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார்.

மேலும் செய்திகள்