புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி; புதிதாக 124 பேர் பாதிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். புதிதாக நேற்று 124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊழியருக்கு தொற்றால் வங்கி மீண்டும் மூடப்பட்டது.

Update: 2020-08-29 23:03 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. தினமும் சராசரியாக 3 இலக்க எண்ணிக்கையில் தொற்று பதிவாகி வருகிறது. மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 124 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 875 ஆக உயர்ந்தது.

சிகிச்சையில் இருந்த 103 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று இதுவரை 4,500 பேர் ‘டிஸ்சார்ஜ்’ ஆகி உள்ளனர். கொரோனா சிகிச்சையில் இருந்த 65 வயது முதியவர் ஒருவர், 67 வயது மூதாட்டி ஆகியோர் இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.

வங்கி மூடல்

அறந்தாங்கியில் உள்ள இந்தியன் வங்கி கிளை மேலாளருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதி வங்கி மூடப்பட்டது.

பின்னர் மீண்டும் வங்கி திறக்கப்பட்டு, பணப்பரிவர்த்தனை நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த வங்கியில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த வங்கி மீண்டும் மூடப்பட்டது.

அரிமளம்

அரிமளம் ஒன்றியம் ஏம்பல் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 54 வயது ஆண், சுதந்திரபுரம் கிராமத்தை சேர்ந்த 20 வயது வாலிபர், அரிமளம் அருகே உள்ள சத்திரம் கிராமத்தை சேர்ந்த 68 வயது முதியவர், வெட்டிக்காடு கிராமத்தை சேர்ந்த 21 வயது வாலிபர், அரிமளம் பேரூராட்சி பகுதியை சேர்ந்த 40 வயது பெண், 34, 32, 42 வயது வாலிபர்கள், 60 வயது பெண், 26 வயது பெண், 72 வயது மூதாட்டி, ராயவரம் கிராமத்தை சேர்ந்த 27 வயது பெண், 33 வயது வாலிபர், பெருங்குடி கிராமத்தை சேர்ந்த 65 வயது முதியவர், லெணா விலக்கு பகுதியை சேர்ந்த 49 வயது ஆண் உள்பட 16 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

மேலும் செய்திகள்