தஞ்சை அருகே பரிதாபம்: வங்கி முன்பு தீக்குளித்த தொழிலாளி சாவு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தர்ணா

தஞ்சை அருகே வங்கி முன்பு தீக்குளித்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-08-29 23:41 GMT
கள்ளப்பெரம்பூர்,

தஞ்சை அருகே உள்ள வல்லம் வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ஆனந்த்(வயது 40). வெல்டிங் தொழிலாளியான இவர், வல்லத்தில் உள்ள தனியார் வங்கியில் கடந்த 2015-ம் ஆண்டு வீடு கட்டுவதற்காக ரூ.9 லட்சம் கடன் பெற்று இருந்தார். இந்த கடனுக்காக அவர் ரூ.13 லட்சத்தை வங்கியில் செலுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மேலும் ரூ.6½ லட்சத்தை வங்கியில் செலுத்தும்படி வங்கி சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆனந்துக்கு ஜப்தி நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக வங்கி அதிகாரிகள் ஆனந்தின் வீட்டுக்கு சென்று அவருடைய மனைவி ஹேமாவை மிரட்டியதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி ஆனந்த் வங்கிக்கு சென்று ரூ.3 லட்சம் செலுத்துவதாக கூறி உள்ளார். இதனை ஏற்காத வங்கி அதிகாரிகள், வட்டியுடன் முழு தொகையையும் செலுத்த வேண்டும் என்றும், இல்லை என்றால் வீட்டை ஜப்தி செய்து விடுவோம் என்றும் மிரட்டி உள்ளனர். இதனால் விரக்தி அடைந்த ஆனந்த், வங்கி வாசலில் நின்று கொண்டு மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

தர்ணா போராட்டம்

இதில் உடல் கருகி மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த அவரை உடனடியாக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதித்தனர். இந்த பரிதாப சம்பவத்தை தொடர்ந்து நேற்று முன்தினம் வங்கி முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள், வங்கி மேலாளரை கைது செய்ய வலியுறுத்தினர்.

அப்போது போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் வங்கி மேலாளர் கைது செய்யப்படவில்லை. இதை கண்டித்து நேற்று காலை மீண்டும் வங்கி முன்பு தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் நீலமேகம், விவசாய சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். வங்கி முன்பு தொடர்ந்து 2-வது நாளாக போராட்டம் நடந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன் மற்றும் போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக போலீசார் கூறினர்.

இதையடுத்து வங்கி மேலாளரை 24 மணி நேரத்தில் கைது செய்ய வேண்டும். ஆனந்த் குடும்பத்துக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் இல்லை என்றால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

சிகிச்சை பலனின்றி சாவு

இந்த நிலையில் நேற்று மதியம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆனந்த், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஆனந்துக்கு ஹேமா என்ற மனைவியும், 8 வயதில் அவினாஷ், 6 வயதில் சாய்சர்வேஷ் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் அவருடைய உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் உள்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி 4-வது கேட் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், இது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து வங்கி மேலாளர், ஊழியரை உடனடியாக கைது செய்ய வேண்டும். இறந்தவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இறந்தவரின் மனைவிக்கு வங்கியில் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

5 மணி நேரம்

இது குறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் வெங்கடேசன், வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீத்தாராமன் மற்றும் வல்லம் போலீஸ் அதிகாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 5 மணி நேரத்திற்கும் மேல் இந்த தர்ணா போராட்டம் நீடித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்