கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு நகைக்கடை உரிமையாளர் உள்பட 4 பேர் சாவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு நகைக்கடை உரிமையாளர் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 171 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

Update: 2020-08-30 01:10 GMT
கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 5,708 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5118 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 66 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:- கள்ளக்குறிச்சியில் நகைகடை வைத்து நடத்தி வரும் 57 வயதுடையவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு, பரிதாமாக உயிரிழந்தார். இதேபோல் கள்ளக்குறிச்சி கோட்டையை சேர்ந்த 58 வயது பெண், மட்டிகைக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த 45 வயது ஆண் ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். இதேபோல் கொரோனாவால் பாதிக் கப்பட்ட உளுந்தூர்பேட்டையை சேர்ந்த 85 வயது ஆண் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது.

82 பேருக்கு தொற்று

இந்த நிலையில் நேற்று 560 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளியானது. இதில் 82 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. தொற்று உறுதியான அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு, 5,790 ஆக உயர்ந்துள்ளது.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 6,898 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 65 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 5,865 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 968 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நேற்று 600-க்கும் மேற்பட்டோரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வந்தது. இதில் மேலும் 171 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டாக்டர், மரக்காணத்தை சேர்ந்த தனியார் மருத்துவமனை டாக்டர், விழுப்புரம் நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு போலீஸ் ஏட்டு, வளவனூர் போலீஸ்காரர், காணை அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர், கோலியனூர் டாஸ்மாக் கடை விற்பனையாளர் உள்ளிட்டோரும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் விழுப்புரம் கொரோனா சிறப்பு மருத்துவமனை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, விழுப்புரம் மனிதவள சுகாதார மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் உள்ள தற்காலிக மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

7069 ஆக உயர்வு

இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,069 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நோய் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 145 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுதவிர கொரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக 1,065 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்