வீட்டை விற்பதாக ஆன்லைனில் விளம்பரம் செய்து வாலிபரிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்த கணவன்-மனைவி

வீட்டை விற்பதாக ஆன்லைனில் விளம்பரம் செய்து வாலிபரிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்த கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-08-30 01:28 GMT
பெரம்பூர்,

சென்னை வண்ணாரப்பேட்டை நரசய்யா தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி(வயது 50). இவருடைய மனைவி அமுதா(47). இவர்கள் அதே பகுதியில் உள்ள வீடு ஒன்று விற்பனைக்கு உள்ளதாக ஆன்லைனில் விளம்பரம் செய்து இருந்தனர்.

இதனை பார்த்த தனியார் நிறுவன ஊழியரான வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலை பகுதியைச்சேர்ந்த குலாம் அகமது (35) என்பவர் அந்த வீடு பிடித்துபோனதால் ரவியிடம் பேசி வீட்டுக்கு விலை நிர்ணயம் செய்தார். பின்னர் முன்பணமாக ரூ.15 லட்சத்தை கொடுத்து ஒப்பந்தம் செய்துகொண்டதாக தெரிகிறது.

பணத்தை பெற்றுக்கொண்ட ரவி-அமுதா தம்பதி, அந்த வீட்டை 3 மாதத்துக்குள் காலி செய்து தருவதாக கூறினர். ஆனால் அதன்பிறகும் அவர்கள் வீட்டை காலி செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

இதனால் அந்த வீட்டுக்கு கொடுத்த முன்பணம் ரூ.15 லட்சத்தை திரும்ப தரும்படி குலாம் அகமது கேட்டார். அதற்கு அந்த தம்பதி, ரூ.8 லட்சத்துக்கு ஒரு காசோலை, ரூ.7 லட்சத்துக்கு ஒரு காசோலை என ரூ.15 லட்சத்துக்கு 2 காசோலைகள் கொடுத்தனர்.

ஆனால் வங்கி கணக்கில் பணம் இல்லாததால் 2 காசோலைகளும் திரும்பி வந்தது. இதனால் ஆத்திரமடைந்த குலாம் அகமது, இதுபற்றி கேட்டபோது கணவன்-மனைவி இருவரும் சரிவர பதில் அளிக்காததால் இந்த மோசடி குறித்து வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கணவன்-மனைவி இருவரும் வீட்டை விற்பதாக கூறி வாலிபரிடம் பணம் மோசடி செய்தது உறுதியானது. இதையடுத்து ரவி, அமுதா இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்