நடுக்கடலில் பழுதடைந்த விசைப்படகு கரை ஒதுங்கியது

நடுக்கடலில் பழுதடைந்த விசைப்படகு வீராம்பட்டினம் பகுதியில் கரை ஒதுங்கியது.

Update: 2020-08-30 02:05 GMT
அரியாங்குப்பம்,

புதுவை அருகே உள்ள வீராம்பட்டினத்தை சேர்ந்தவர் பரசுராமன் (வயது 39). இவருக்கு சொந்தமான விசைப் படகில் கடலூர் குமரப்பேட்டையை சேர்ந்த கந்தவேலு (45), பெரியபட்டு சிவக்குமார் (44), சோனாங்குப்பம் வீரமணி (50) உள்பட 8 மீனவர்கள் புதுச்சேரி தேங்காய்திட்டு துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை கடல் பகுதியில் அவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, படகின்கீழ் பகுதியில் உடைப்பு ஏற்பட்டதால், கடல்நீர் உள்ளே புகுந்தது. இது குறித்து படகு உரிமையாளருக்கு செல்போன் மூலம் மீனவர்கள் தெரிவித்தனர். உடனே, பரசுராமன் மற்றொரு படகில் அவர்களை மீட்க புறப்பட்டு சென்றார்.

நடுக்கடலில் படகில் தவித்த 8 மீனவர்களும் பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வரப்பட்டனர். மேலும், பழுதாகி நின்ற படகினை மீட்டு கொண்டுவர முயற்சி செய்தனர். அந்த படகை பரசுராமன் சென்ற படகுடன் கயிறு கட்டி இணைத்து இழுத்து வந்தனர். புதுச்சேரி - கடலூர் எல்லையான நல்லவாடு பகுதியில் வந்தபோது, பழுதடைந்த படகு என்ஜினில் அதிகளவில் தண்ணீர் புகுந்ததால், மேற்கொண்டு இழுத்துவர முடியவில்லை. அலையின் போக்குக்கு ஏற்ப படகு கரையை நோக்கி நகர்ந்தது.

நேற்று மதியம் 2 மணியளவில் வீராம்பட்டினம் பகுதியில் படகு கரை ஒதுங்கி, தரை தட்டி நின்றது. இந்த படகை மீட்டு துறைமுகத்துக்கு கொண்டு செல்ல மீனவர்கள் முயற்சித்து வருகின்றனர். தரை தட்டியதால் படகு என்ஜின் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்