திருட்டு வழக்கில் தேடப்பட்டவர் 31 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார்

காரைக்காலில் திருட்டு வழக்கில் தலைமறைவானவர் 31 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.

Update: 2020-08-30 02:07 GMT
காரைக்கால்,

காரைக்கால் திரு-பட்டினம் பாண்டுரங்கசாமி பஜனை மடத்தில் 1989-ம் ஆண்டு கலைநயமிக்க 3 சாமி படங்கள் திருடு போயிருந்தது. இது குறித்து திரு-பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தஞ்சாவூர் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த தியாகராஜன் (வயது 61), அமானுல்லா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் அமானுல்லா கோர்ட்டில் முறையாக ஆஜராகி சிறை தண்டனை பெற்றார். இதற்கிடையில் ஜாமீனில் வெளியே வந்த தியாகராஜன் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டார். அவரை நீதிமன்றம் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.

இந்தநிலையில் காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகரிகா பட் உத்தரவின்பேரில் தேடப்படும் குற்றவாளியான தியாகராஜனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அவர் தஞ்சாவூரில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் திரு-பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் அங்கு சென்று தியாகராஜனை கைது செய்து காரைக் கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருட்டு வழக்கில் 31 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை கைது செய்த போலீசாருக்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்தார்.

மேலும் செய்திகள்