பிரதோஷத்தன்று பக்தர்களின்றி வெறிச்சோடிய பிரகதீஸ்வரர் கோவில்

பிரதோஷ தினமான நேற்று கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Update: 2020-08-30 22:50 GMT
மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் ராஜேந்திர சோழனால் கலைநயத்துடன் பிரமாண்டமாக கட்டப்பட்டது. போர் கைதிகள் மற்றும் வீரர்களை கொண்டு 4½ ஏக்கர் பரப்பளவில் தற்போதைய பொறியியல் வல்லுனர்களுக்கு சவால்விடும் வகையில் இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கோவில் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த கோவிலில் இந்து சமய அறநிலையத்துறையினர் பூஜைகள் செய்து நிர்வகித்து வருகின்றனர்.

உலக புராதன சின்னங்கள் அடங்கிய பட்டியலை வெளியிடும் யுனஸ்கோ அமைப்பினர் இந்த கோவிலை புராதன சின்னமாக அறிவித்து உலக சுற்றுலா வரைபடத்தில் இடம்பெற செய்து பெருமைப்படுத்தியுள்ளனர். இதனால் இந்த கோவிலுக்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து சென்றனர்.

மூடப்பட்டது

இந்த கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் சுற்றளவு 62 அடி, உயரம் 13½ அடி ஆகும். இந்த சிவலிங்கம் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது என்ற சிறப்பும் உண்டு. இதை காண தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த கோவிலுக்கு வந்து சென்றனர். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர். இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், கடந்த மார்ச் மாதம் 18-ந் தேதி முதல் இந்த கோவில் மூடப்பட்டது.

இதையடுத்து இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கோவில் முன்பு உள்ள இரும்பு கிரில்கேட், கொடிமரம் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திய அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி, மருந்து தெளிப்பான் மூலம் தெளிக்கப்பட்டது. மேலும் பிரகதீஸ்வரர் கோவில் மூடப்பட்டது இதுவே முதல் முறையாகும். ஆகம விதிமுறைகளின்படி பூஜைகள் நடைபெறுகிறது. ஆனால் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

வெறிச்சோடியது

இந்த கோவிலில் வழக்கமாக பிரதோஷத்தன்று நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் கோவில் மூடப்பட்ட பின்னர் பிரதோஷ தினத்தன்று கோவிலில் பூஜைகள், அபிஷேகம், தீபாராதனை போன்றவை நடைபெறவில்லை. நேற்றும் இதே நிலையே நீடித்தது. பக்தர்களின்றி கோவில் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்தனர். அரசு உத்தரவிட்ட பின்னரே அனைத்து பூஜைகளும் நடைபெறும் என்று கோவில் அர்ச்சகர் தியாகராஜன் தெரிவித்தார். கோவில் எப்போது திறக்கப்படும் என்று பக்தர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

மேலும் செய்திகள்