பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு: கடல் வழியாக வேளாங்கண்ணிக்குள் நுழைய முயன்ற 7 பேர் மீது வழக்கு

பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதால் கடல் வழியாக வேளாங்கண்ணிக்குள் நுழைய முயன்ற 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2020-08-30 23:34 GMT
வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை போராலய திருவிழாவில் ஆண்டுதோறும் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக வேளாங்கண்ணி போராலய திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் நேற்று முன்தினம் பக்தர்கள் இன்றி திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. வெளியூர்களில் இருந்து வேளாங்கண்ணி பகுதிக்குள் வரக்கூடிய 8 வழிகளையும் போலீசார் அடைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வழக்குப்பதிவு

நேற்று முன்தினம் மாலை வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அப்போது கடல் வழியாக ஒரு படகில் வந்த 7 பேர் கடற்கரையில் இறங்கி வேளாங்கண்ணிக்குள் நுழைய முயன்றனர். உடனே அவர்களை மடக்கி பிடித்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருவள்ளூர் மாவட்டம் புல்லரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தூயவன்(வயது32), கடம்பத்தூர் பகுதியை சேர்ந்த தினேஷ்(32), சென்னை வில்லிவாக்கம் காந்திநகர் பகுதியை சேர்ந்த மேகநாதன்(32), திண்டுக்கல் மாவட்டம் நாகல்நகர் பகுதியை சேர்ந்த ஜேம்ஸ்ஆம்ஸ்ட்ராங்க்(43), அவரது மகன் டேனியல்(19), யாகப்பன்பட்டி பகுதியை சேர்ந்த ஆரோக்கியசாமி(30), மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த டேவிட் சாந்தியாகு மகன் விஜய்ராபர்ட்(21) என்றும் தெரியவந்தது. மேலும் அவர்கள் தாங்கள் வந்த காரை வேளாங்கண்ணிக்கு வெளியே ஒரு பகுதியில் நிறுத்தி விட்டு அங்கிருந்து செருதூர் கடல் பகுதி வழியாக படகில் வேளாங்கண்ணிக்கு வந்து மாதாவை தரிசிக்க முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கடல் வழியாக வேளாங்கண்ணிக்குள் நுழைய முயன்ற 7 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்