வங்கி முன்பு தீக்குளித்து தொழிலாளி தற்கொலை: உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக போராட்டம்

தஞ்சை அருகே வங்கி முன்பு தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து வங்கி நிர்வாகம் கடனை தள்ளுபடி செய்து உள்ளது.

Update: 2020-08-30 23:38 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை அருகே உள்ள வல்லம் வள்ளலார் நகரை சேர்ந்தவர் ஆனந்த்(வயது40). வெல்டிங் தொழிலாளியான இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் ஊருக்கு வந்திருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக, மீண்டும் வெளிநாடு செல்ல முடியாமல் ஊரில் தங்கியிருந்து வேலை செய்து வந்துள்ளார்.

இவர் வல்லத்தில் உள்ள ஒரு வங்கியில் வீட்டுக்கடனாக ரூ.9 லட்சம் வாங்கினார். இதற்கு அசலும், வட்டியுமாக ரூ.13 லட்சம் செலுத்திய நிலையில், மேலும் ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் உடனடியாக செலுத்த வேண்டும் என வங்கி நிர்வாகம் மிரட்டியதாக கூறப்படுகிறது.

பரிதாப சாவு

இது தொடர்பாக வங்கி அதிகாரிகளுடன் பேசிய போது குறிப்பிட்ட தொகையை செலுத்துவதாக ஆனந்த் கூறியும், ஏற்க மறுத்த வங்கி அதிகாரிகள் முழுத்தொகையையும் உடனடியாக செலுத்தாவிட்டால், வீட்டை ஏலம் விடப்போவதாக தெரிவித்தனர். இதனால் மனம் உடைந்த ஆனந்த் வங்கி வாசலில் தீக்குளித்தார். இதில் தீக்காயங்களுடன் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆனந்த், சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதைத்தொடர்ந்து ஆனந்த் மரணத்துக்கு காரணமான வங்கி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்ய வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு வங்கிப்பணி வழங்க வேண்டும். ஆனந்த் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் அதன் பின்னரே ஆனந்தின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுமதிப்பதோடு, உடலை பெற்றுக்கொள்வதாக உறவினர்கள் தெரிவித்து நேற்று முன்தினம் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2-வது நாளாக தர்ணா

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் கலந்து கொண்டனர். தர்ணா போராட்டத்தின் போது தாசில்தார், போலீசார், வங்கி அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்ததையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதைத்தொடர்ந்து நேற்று 2-வது நாளாக தர்ணா போராட்டம் தொடர்ந்தது. இதில் ஆனந்தின் மனைவி மற்றும் உறவினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நீலமேகம், செயற்குழு உறுப்பினர்கள் மனோகரன், மாலதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சாமி.நடராஜன், மாவட்ட செயலாளர் கண்ணன், மாவட்ட தலைவர் செந்தில்குமார், மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி, மாவட்ட தலைவி கலைச்செல்வி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டத் தலைவர் அபிமன்னன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்.டி.ஓ. பேச்சுவார்த்தை

இதைத்தொடர்ந்து, அங்கு வந்த தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) வேலுமணி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சீதாராமன், பாரதிராஜன், மற்றும் வங்கி அலுவலர்கள், சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் வீட்டுக்கடன் பாக்கி ரூ.6 லட்சத்து 94 ஆயிரத்து 287-ஐ தள்ளுபடி செய்து, அதற்கான ஆவணங்களை திருப்பி தருவதாகவும், ஆனந்த் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.5 லட்சமும் தருவதாக வங்கித்தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர் ஆனந்தின் உடல் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து வல்லத்தில் உள்ள ஆனந்தின் வீட்டுக்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டு மயானத்தில் நேற்று அடக்கம் நடைபெற்றது. இதையொட்டி தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை, வல்லத்தில் உள்ள வங்கி பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்