இளம் தொழில்முனைவோர் 2 பேரை திருடர்களாக மாற்றியது கொரோனா

இளம் தொழில்முனைவோர் 2 பேரை கொரோனா திருடர்களாக மாற்றிவிட்டது.

Update: 2020-08-31 00:05 GMT
நாக்பூர்,

நாடு முழுவதும் கொரோனா தொற்று பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. அத்துடன் நிற்காத இந்த நோய் பாதிப்பு கடுமையான பொருளதார இழப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு சாட்சியாக நிற்கிறார்கள் நாக்பூரை சேர்ந்த 2 இளைஞர்கள். நாக்பூர், சதார் பகுதியை சேர்ந்தவர் மோனிஷ் தத்லானி(வயது 27), அவர் சொந்தமாக துணி தயாரிப்பு நிறுவனம் வைத்திருந்தார். இதேபோல் விவேக் சேவாக்(22) என்பவர் சுற்றுலா ஏற்பாடு செய்யும் தொழில் செய்து வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் வாழ்க்கையில் முன்னேறும் முனைப்புடன் தீவிரமாக பணி செய்துவந்த அவர்களின் தொழிலை கொரோனா முடக்கி போட்டது.

இதனால் வருமானம் இன்றி விழிபிதுங்கி நின்றனர். உழைப்பும், முயற்சியும் வீணான விரக்தி அவர்களை தவறான வழிக்கு அழைத்து சென்றது. இருவரும் இரு சக்கர வாகனங்களை திருடினர். ஆனால் இவர்களின் தவறுகளை மோப்பம் பிடித்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள 10 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பணத்தை எண்ணும் தொழில் அதிபராக கனவு கண்ட 2 வாலிபர்களையும், கொரோனா அரக்கன் திருடர்களாக்கி கம்பி எண்ண வைத்துவிட்டான்.

மேலும் செய்திகள்