கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தளர்வு இல்லா முழு ஊரடங்கையொட்டி நேற்று கடைகள் அடைக்கப்பட்டன. போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடின.

Update: 2020-08-31 01:10 GMT
கிருஷ்ணகிரி,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதையொட்டி கொரோனா பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதனிடையே ஆகஸ்டு மாதம் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தளர்வு இல்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

இதையொட்டி கிருஷ்ணகிரி நகரில் உள்ள பெங்களூரு சாலை, சென்னை சாலை, காந்தி சாலை, சேலம் சாலை, பழைய சப்-ஜெயில் சாலை, கே.தியேட்டர் சாலை, ராயக்கோட்டை சாலை உள்பட நகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. அத்தியாவசிய பொருட்களான பால், மருந்து கடைகள் திறந்து இருந்தன.

100 சதவீதம் கடைகள் அடைப்பு

முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வீடுகளில் முடங்கியதால் வாகனங்கள், பொதுமக்கள் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஒரு சிலர் அத்தியாவசிய தேவைக்காக வெளியில் வாகனங்களில் சென்றனர். தொழில் நகரமான ஓசூர், பர்கூர், தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரை, கல்லாவி, மத்தூர், போச்சம்பள்ளி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் 100 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

இதன் காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் கிருஷ்ணகிரி பெங்களூரு சாலை, ஓசூர் எம்.ஜி.ரோடு சாலைகள் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. சாலைகளில் தேவையின்றி வந்த பொதுமக்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி எச்சரித்து அனுப்பினர்.

மேலும் செய்திகள்