காக்கி சட்டைக்குள் மனிதநேயம்: சென்னையில், ஏழைகளுக்கு உணவு வழங்கி வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர்

வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சுப்புலட்சுமி தினமும் செல்லப்பிராணிகளுக்கு தண்ணீரும், உணவும் கொடுத்து வருகிறார்.

Update: 2020-08-31 01:19 GMT
சென்னை,

கொரோனா ஊரடங்கு காலத்தில் பறவைகள், நாய்கள் உள்பட செல்லப்பிராணிகளின் பசி, தாகம் தீர்க்கும் வகையில் வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சுப்புலட்சுமி தினமும் செல்லப்பிராணிகளுக்கு தண்ணீரும், உணவும் கொடுத்து வருகிறார். இதற்காகவே தெருக்கள்தோறும் செல்லப்பிராணிகளுக்கு என உணவு பாத்திரங்கள் வைக்கப்பட்டு இருக்கின்றன. அந்தளவு வாயில்லா ஜீவன்கள் மீது பரிவு காட்டி வருகிறார். அதேபோல பல போலீசார் ஊரடங்கு காலத்தில் தன்னால் இயன்ற உதவிகளை ஏழைகளுக்கு அளித்து வருகிறார்கள். அந்த வகையில் மனிதநேயமிக்க அந்த போலீஸ்காரர்கள் பட்டியலில் திருவல்லிக்கேணி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் எஸ்.சீத்தாராமுவும் இடம்பெற்று உள்ளார்.

இவர், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அருகே, சாலையோரம் வசிப்பவர்களுக்கு தனது சொந்த செலவில் உணவு வழங்கி வருகிறார். வெஜிடபிள் பிரியாணி, கேசரி, தக்காளி சாதம் என வாரந்தோறும் 200 பேருக்கு உணவு வினியோகித்து வருகிறார். இதனால் குறிப்பிட்ட நேரத்துக்கு ஏராளமானோர் அங்கு திரண்டு, உணவு சாப்பிட்டு செல்கிறார்கள். சிலர் தங்களது வீட்டுக்கு பார்சலும் வாங்கிச் செல்கிறார்கள்.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சீத்தாராம் கூறுகையில், “திருவல்லிக்கேணியில் சாலையோரம் வசிப்பவர்கள் அதிகம் உள்ளனர். இந்த நிலையில் முழு ஊரடங்கின்போது இவர்கள் சாப்பாட்டுக்கு கஷ்டப்படுவதாக தெரியவந்தது. இதனால் இவர்களுக்கு உணவு வழங்கி வருகிறேன். இதில் ஒரு மன நிம்மதி கிடைக்கிறது” என்றார்.

அதேபோல் தாம்பரம் பஸ் நிலையத்தில் பசியால் தவித்த ஆதரவற்றோர்களுக்கு தாம்பரம் போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் அசோகன் தலைமையில், இன்ஸ்பெக்டர் ஆல்வின்ராஜ் மற்றும் போலீசார் உணவு பொட்டலங்களை வழங்கினர்.

மேலும் செய்திகள்