அரசு உத்தரவை தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நாளை முதல் திறப்பு

அரசு உத்தரவை தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நாளை முதல் திறக்கப்படுகிறது. எனவே தரிசனம் செய்ய பக்தர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

Update: 2020-08-31 01:48 GMT
மதுரை,

கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் இறுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து மக்கள் கூடும் இடங்களான கோவில், பூங்கா, திரையரங்குகள், போக்குவரத்து போன்றவை மூடப்பட்டன. கோவில்கள் மூடப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. ஆனால் சுவாமிக்கு அன்றாடம் நடைபெறும் பூஜைகள் மட்டும் பட்டர்களால் செய்யப்பட்டு வந்தது.

மேலும் கொரோனா தீவிரம் காரணமாக கோவிலில் நடைபெறும் திருவிழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதனால் பக்தர்கள் சுவாமியை காண முடியாமல் தவித்து வந்தனர். எனவே அவர்களின் மனக்குறையை போக்க ஒருசில பெரிய கோவில்களில் சில விழாக்கள் மட்டும் கோவிலுக்குள்ளேயே நடத்தப்பட்டு, அதனை இணையதளம் வழியாக ஒளிபரப்பப்பட்டது.

கட்டுப்பாடுகள்

கொரோனா பரவல் குறைந்து வந்ததை தொடர்ந்து அரசு பல்வேறு தளர்வுகளை கொண்டு வந்தது. அதில் வருமானம் குறைந்த சிறிய கோவில்கள் அனைத்தும் கடந்த 1-ந் தேதி முதல் திறக்கப்பட்டன. அந்த கோவில்களுக்கு பக்தர்கள் எவ்வாறு செல்ல வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகளை அரசு அறிவித்தது. அதன்படி பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர்.

இந்தநிலையில் தமிழக அரசு வருகிற பொது ஊரடங்கு உத்தரவை பல்வேறு கட்டுப்பாட்டுகளுடனும், தளர்வுகளுடன் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை நீட்டித்துள்ளது. அரசு வெளியிட்டுள்ள முக்கியமான தளர்வுகளில் அனைத்து வழிபாட்டு தலங்களில் பொதுமக்களின் தரிசனத்திற்கு அனுமதி என்று அறிவித்துள்ளது. அதைதொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து பெரிய கோவில்களும் திறக்கப்பட உள்ளன.

மீனாட்சி அம்மன் கோவில்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் நாளை(செவ்வாய்க்கிழமை) காலை வழக்கம் போல் திறக்கப்பட உள்ளதாக கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை தெரிவித்துள்ளார். அதன்படி காலை 5 மணி முதல் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். பக்தர்கள் வருகையையொட்டி கோவில் முழுவதும் சுத்தம் செய்யும் பணி இன்று தொடங்குகிறது.

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக தற்போது மீனாட்சி அம்மன் கோவில் பணிபுரியும் ஊழியர்கள், பட்டர்கள் என அனைவரும் மேற்குகோபுரம் வழியாக தான் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் பக்தர்கள் எந்த வழியாக அனுமதிக்கப்படுவார்களா என்பது தெரியவில்லை. மேலும் பக்தர்கள் கோவிலுக்குள் செல்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்ன என்பது குறித்தும் இன்னும் தெரியவில்லை. ஆனால் பக்தர்கள் அனைவரும் கோவில் திறந்த உடன் சுவாமியை தரிசனம் செய்ய ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்