தளர்வு இல்லா முழு ஊரடங்கு: மாவட்டம் முழுவதும் கடைகள் அடைப்பு பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின

தளர்வு இல்லா முழு ஊரடங்கையொட்டி நேற்று மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின.

Update: 2020-08-31 02:27 GMT
கடலூர்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக அவ்வப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் ஞாயிற்றுக்கிழமை தோறும் தளர்வு இல்லா முழு ஊரடங்கு பின்பற்றப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி தளர்வு இல்லா முழு ஊரடங்கு பின்பற்றப்பட்டது.

அதன்படி இந்த (ஆகஸ்டு) மாதமும் ஞாயிற்றுக்கிழமை தோறும் தளர்வு இல்லா ஊரடங்கு கடந்த 2, 9, 16, 23-ந்தேதிகளில் பின்பற்றப்பட்டு வந்தது. மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் இந்த தளர்வு இல்லா முழு ஊரடங்கு கடலூர் மாவட்டம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது.

கடைகள் அடைப்பு

இதையொட்டி மாவட்டத்தில் பால், மருந்து கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. கடலூரில் நேதாஜி சாலை, பாரதிசாலை, லாரன்ஸ் ரோடு, இம்பீரியல் சாலை, கடலூர்-நெல்லிக்குப்பம் சாலை என அனைத்து சாலைகளில் உள்ள கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டன. அதில் உள்ள சில மருந்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்ததை காண முடிந்தது.

கடலூர் மஞ்சக்குப்பம் மைதானம், கோ-ஆப்டெக்ஸ் எதிரில் உள்ள தற்காலிக மார்க்கெட்டுகளும் மூடப்பட்டன. நகைக்கடைகளும் முற்றிலும் அடைக்கப்பட்டு இருந்தது. நேற்று முகூர்த்த நாள் என்பதால் ஒரு சில சிறிய ஓட்டல்கள் மட்டும் திறக்கப்பட்டு இருந்ததை பார்க்க முடிந்தது. அத்தியாவசிய தேவைக்காக இரு சக்கர வாகனம், கார்களில் ஒரு சிலர் சென்று வந்தனர். தேவையின்றி சுற்றித்திரிந்தவர்கள் மீது போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சாலைகள் வெறிச்சோடியது

ஒரு சில இடங்களில் மட்டும் அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். இருந்த போதிலும் பொதுமக்கள் நடமாட்டமின்றி பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி கிடந்தது. கடலூர் உள்ளிட்ட சில இடங்களில் பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்