கர்நாடகத்தில் மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு விரைவில் தடை - மந்திரி சுதாகர் தகவல்

கர்நாடகத்தில் மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு விரைவில் தடை விதிக்கப்படும் என்று மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2020-08-31 05:55 GMT
பெங்களூரு, 

கர்நாடகத்தில் மாடுகளை இறைச்சிக்காக கடத்தி செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக பசுகள் நலவாரியத்தை கர்நாடக அரசு உருவாக்கி உள்ளது. அதுபோல், கர்நாடகத்தில் பசுவதை தடுப்பு சட்டத்தை நிறைவேற்றவும் அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 

இந்த நிலையில், சிக்பள்ளாப்பூரில் புதிதாக அமைக்கப்பட்ட கோசாலையின் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில், மாவட்ட பொறுப்பு மந்திரியும், மருத்துவ கல்வித்துறை மந்திரியுமான சுதாகர் கலந்துகொண்டு கோசாலையை திறந்து வைத்தார். 

பின்னர் அவர் அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பசுமாடு குடும்ப உறுப்பினர்களை போன்றது. அவற்றை கொல்வது குற்றமாகும். மாடுகளின் சாணம் கிருமி நாசினியாகவும் பயன்படுத்தப்படுகிறது. முன்பு எங்கள் குடும்பத்தில் நிறைய மாடுகளை வளர்த்து வந்தோம். பசுவதைக்கு எதிராக நலவாரியத்தை உருவாக்க வேண்டியது அவசியமாக உள்ளது. 

நாம் இந்தியர்களாக இருப்பதால், அனைத்து மாநில அரசுகளும் பசுவதைக்கு தடை செய்ய வேண்டும். பசுமாடுகளை பலர் தெய்வமாக வணங்கி வருகிறார்கள். கர்நாடக சட்டசபையின் இரு அவைகளிலும் மாட்டிறைச்சியை தடை செய்வது பற்றி விரிவான விவாதம் நடத்தப்படும். கர்நாடகத்தில் மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படும். இதுகுறித்து விரைவில் ஒரு முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்