தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கால் வெறிச்சோடிய திண்டுக்கல்

தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கால் திண்டுக்கல் மாவட்டம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.

Update: 2020-08-31 06:03 GMT
திண்டுக்கல்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்த மாதத்தின் (ஆகஸ்டு) ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி ஞாயிற்றுக்கிழமையான நேற்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் திண்டுக்கல் நகரில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் என அனைத்தும் அடைக்கப்பட்டன. மருந்து விற்பனை கடைகள் மட்டும் திறந்திருந்தன.

முழு ஊரடங்கு என்பதால் நேற்று திண்டுக்கல்-பழனி பைபாஸ் சாலை, திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலை என நகரின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஆனாலும் நகருக்குள் சிலர் மோட்டார் சைக்கிள்களில் சுற்றித்திரிந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் அத்தியாவசிய தேவைக்காக அவர்கள் வெளியே வந்திருந்தால் மட்டும் தொடர்ந்து செல்ல அனுமதித்தனர்.

197 பேர் மீது வழக்கு

தேவையின்றி மோட்டார் சைக்கிள்கள், கார்களில் வெளியே வந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததோடு அவர்களின் வாகனங்களையும் போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் வெளியே சுற்றித்திரிந்த 197 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

232 மோட்டார் சைக்கிள்கள், 12 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும் அந்தந்த பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்படும். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அனுமதியளித்ததும், உரிமையாளர்கள் வாகனங்களுக்கான ஆவணங்களை சமர்ப்பித்து எடுத்துச்செல்லலாம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்