பெங்களூருவில் 7-ந்தேதி முதல் மெட்ரோ ரெயில் இயக்கம்: ஊரடங்கு 4-வது கட்ட தளர்வு-வழிகாட்டுதல்கள் கர்நாடக அரசு அறிவிப்பு

கர்நாடக அரசு, 4-வது கட்ட தளர்வுக்கான வழிகாட்டுதலை நேற்று வெளியிட்டது. அதில் வருகிற 7-ந்தேதி முதல் மெட்ரோ ரெயில் இயக்கவும், வெளிமாநில போக்குவரத்துக்கு அனுமதி அளித்தும் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் 21-ந்தேதி முதல் மாணவர்கள் ஆலோசனை பெற பள்ளிக்கு செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Update: 2020-08-31 23:14 GMT
பெங்களூரு,

கர்நாடகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

அது பல்வேறு கட்டங்களாக நீட்டிக்கப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 29-ந் தேதி மத்திய அரசின் சுகாதாரத்துறை, அன்லாக்-4 வழிகாட்டுதலை வெளியிட்டது. இந்த வழிகாட்டுதல்களை கர்நாடகத்தில் அமல்படுத்துவது பற்றி கர்நாடக அரசு தீவிரமாக ஆலோசித்து வந்தது.

இந்த நிலையில் கர்நாடகத்தில் மத்திய அரசின் உத்தரவை பின்பற்றி கர்நாடக அரசின் தலைமை செயலாளர் விஜயபாஸ்கர், புதிய தளர்வுகளுடன் கொரோனா ஊரடங்கிற்கான புதிய வழிகாட்டுதலை நேற்று வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

* நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் அமலில் உள்ள முழு ஊரடங்கு வருகிற 30-ந் வரை நீட்டிக்கப்படுகிறது.

* கல்வி நிலையங்களில் ஆன்லைன்- தொலைதூர கற்பித்தலை மேற்கொள்ள அனுமதி உண்டு.

* ஆன்லைன் கற்பித்தலுக்காக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களில் 50 சதவீதம் பேர் வரை வருகிற 20-ந் தேதி முதல் பள்ளி-கல்லூரிகளுக்கு வர அனுமதிக்கப்படுகிறது.

* 9-ம், 10-ம் வகுப்பு மற்றும் பி.யூ.சி. முதலாம் மற்றும் 2-ம் ஆண்டு மாணவ-மாணவிகள் ஆசிரியர்களின் ஆலோசனை பெற பள்ளி-கல்லூரிகளுக்கு சொந்த விருப்பத்தின் பேரில் வரலாம். இதற்கு பெற்றோரின் எழுத்து மூலமான அனுமதி பெற வேண்டும். இதற்கு தனியாக சுகாதாரத்துறை வழிகாட்டுதல் வெளியிடப்படும்.

* தேசிய தொழிற்பயிற்சி நிறுவனங்கள், தொழிற்பயிற்சி நிறுவனங்கள், தேசிய தொழிற்பயிற்சி கழகம், மாநில தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசின் அனுமதி பெற்ற தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழிற்பயிற்சிகளை வருகிற 21-ந் தேதி முதல் தொடங்க அனுமதி அளிக்கப்படுகிறது.

* கர்நாடகத்தில் உயர்கல்வித்துறையில் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி (பி.எச்.டி.) பிரிவுகள் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது.

* வருகிற 7-ந் தேதி முதல் பெங்களூருவில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்க அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கு தனியாக வழிகாட்டுதல் வெளியிடப்படும்.

* அதிகபட்சம் 100 பேருடன் சமூக, அரசியல், விளையாட்டு, மனமகிழ், கல்வி, கலாசாரம், ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு வருகிற 21-ந் தேதி முதல் அனுமதி வழங்கப்படும். திருமண நிகழ்ச்சியில் அதிகபட்சம் 50 பேரும், துக்க நிகழ்ச்சியில் 20 மட்டும் பங்கேற்க வேண்டும் என்ற விதிமுறை வருகிற 20-ந் தேதி அமலில் இருக்கும். அதன் பிறகு மேற்கண்ட புதிய விதிமுறை இவற்றுக்கு பொருந்தும்.

* திரையரங்குகள், நீச்சல் குளங்கள், மனமகிழ் பூங்காக்கள், நாடக அரங்கங்கள் உள்ளிட்டவை திறக்க விதிக்கப்பட்டுள்ள தடை நீட்டிக்கப்படுகிறது.

* உள்துறை வழங்கியுள்ள அனுமதியை தவிர, சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை தொடர்ந்து அமலில் இருக்கும்.

* உள்ளாட்சி நிர்வாகங்கள், மத்திய-மாநில அரசுகளுடன் முன்கூட்டியே அனுமதி பெறாமல் உள்ளூர் அளவில் ஊரடங்கை அமல்படுத்தக்கூடாது.

* கர்நாடகத்திற்குள் மக்கள் நடமாடவும், பிற மாநிலங்களில் இருந்து கர்நாடகத்திற்கு பொதுமக்கள் வரவும், சரக்கு வாகன போக்குவரத்திற்கும் எந்த தடையும் இல்லை. ஆனால் சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை பிறப்பித்துள்ள வழிகாட்டுதலை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

* பயணிகள் ரெயில் போக்குவரத்து, சரக்கு ரெயில் போக்குவரத்து, உள்நாட்டு விமான போக்குவரத்து, வந்தே பாரத் விமான போக்குவரத்து, சரக்கு கப்பல்களுக்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுகிறது. இதில் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள சேவைகளுக்கு தடை இல்லை. இவ்வாறு அதில் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்