நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க கோரி கொரோனா களப்பணியாளர்கள் சாலை மறியல் - 2 பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

திருவொற்றியூர் மண்டலத்தில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் களப்பணியாளர்கள், தங்களுக்கு நிலுவையில் உள்ள மாத ஊதியத்தை வழங்ககோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது 2 பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-09-01 01:37 GMT
திருவொற்றியூர்,

சென்னை மாநகராட்சி முழுவதும் கொரோனா வைரஸ் பாதுகாப்பு பணிகளில் தன்னார்வலர்கள், ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த களப்பணியாளர்கள், வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்வது, கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் விவரங்களை சேகரிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் திருவொற்றியூர் மண்டலத்தில் பணியாற்றும் களப்பணியாளர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் அன்றாட உணவு மற்றும் போக்குவரத்துக்கு பணம் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்து, தங்களுக்கு நிலுவையில் உள்ள மாத ஊதியத்தை வழங்கவேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த எண்ணூர் கத்திவாக்கம் பகுதியில் பணிபுரியும் சுமார் 75-க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் எண்ணூரில் உள்ள மாநகராட்சி உதவி பொறியாளர் அலுவலகம் முன்பு ஒன்று கூடினர்.

பின்னர் தங்களுக்கு நிலுவையில் உள்ள மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என்று கோரி திடீரென்று கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கொரோனா வைரஸ் பாதுகாப்பு பணிகள் பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் மண்டல சுகாதார துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது களப்பணியாளர்கள், “நாங்கள் பலமுறை கேட்டும் எங்களுக்கு ஏன் ஊதியம் வழங்கவில்லை?” என்று கேட்டு அதிகாரிகளை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் நிலுவையில் உள்ள ஊதியத்தை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கிறோம் என்று அதிகாரிகள் கூறியதையடுத்து சாலை மறியலை கைவிட்டு அனைவரும் பணிக்கு திரும்பினர்.

முன்னதாக போராட்டத்தின்போது 2 பெண் களப்பணியார்கள் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

மேலும் செய்திகள்