மாவட்டத்தில் இன்று முதல் அரசு பஸ்கள் ஓடத்தயார், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அரசு பஸ்கள் ஓடத்தயார் நிலையில் உள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

Update: 2020-08-31 21:45 GMT
புதுக்கோட்டை,

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த மாதம் (செப்டம்பர்) 30-ந் தேதி வரை ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் பஸ்கள் ஓடும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்திற்குள் அரசு பஸ்களை இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம், டி.வி.எஸ். கார்னர் அருகே உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளில் பஸ்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அரசு பஸ்கள் கடந்த ஜூன் மாதம் மட்டும் இயக்கப்பட்டன. அதன்பின் ஊரடங்கால் பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் பணிமனைகளில் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. அந்த பஸ்களை சுத்தம் செய்யும் பணி நேற்று நடைபெற்றது. மேலும் கிருமி நாசினி தெளித்தும், இருக்கைகளில் சமூக இடைவெளி விட்டு அமரும் வகையில் குறியீடுகளும் வரையப்பட்டன.

அரசு பஸ்களின் டிரைவர், கண்டக்டர்களுக்கு பணி ஒதுக்கீடு குறித்து நேற்று அறிவிக்கப்பட்டன. மேலும் பஸ்கள் இயக்குவது குறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், “பயணிகள் முககவசம் அணிந்து வர வேண்டும். பஸ்சின் டிரைவர், கண்டக்டர்களுக்கு உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டு, காய்ச்சல், சளி, இருமல் ஏதேனும் அறிகுறி உள்ளதா? என கண்டறியப்பட்டு பணி ஒதுக்கப்படும்.

மேலும் டிரைவர், கண்டக்டர்கள் முககவசம் அணிந்து பணியாற்றுவார்கள். பயணிகள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து இருக்கைகளில் அமர வேண்டும். மாவட்டத்தில் மொத்தம் 383 அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. அதிகாலை 6 மணி முதல் இரவு வரை பஸ்கள் இயக்கப்படும். அரசு அறிவித்துள்ள நடைமுறைகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்படும்” என்றார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து பக்கத்து மாவட்டங்களான திருச்சி, மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு செல்ல மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் இருந்து அங்குள்ள அரசு பஸ்கள் மூலம் அடுத்த மாவட்டத்திற்கு பயணிகள் பயணிக்க முடியும். பஸ்கள் இயக்கப்படுவதையொட்டி பஸ் நிலையத்தை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. மேலும் தற்காலிக சந்தையில் அமைக்கப்பட்டிருந்த கடைகளை மீண்டும் ஏற்கனவே வியாபாரம் செய்த இடங்களில் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.

பொன்னமராவதி போக்குவரத்து பஸ் பணிமனையில் உள்ள அரசு பஸ்களை, கிளை மேலாளர் தில்லை ராஜன் தலைமையில் ஊழியர்களை கொண்டு பஸ்கள் சுத்தம் செய்யப்பட்டது. மேலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

பொன்னமராவதி பஸ் நிலையத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை நீக்கி சுத்தம் செய்தனர். மேலும் பஸ் நிலைய வளாகத்தில் உள்ள இருக்கைகளில் தூய்மைப்படுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

கந்தர்வகோட்டை அரசு போக்குவரத்து பணிமனையில் பஸ்கள் சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

அறந்தாங்கி அரசு பணிமனையில் உள்ள பஸ்கள் சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் இன்று முதல் அறந்தாங்கி அரசு பணிமனையில் இருந்து 20 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

மேலும் செய்திகள்