3 எம்.எல்.சி.க்களுக்கு மந்திரி பதவி வழங்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு கவர்னர், முதல்-மந்திரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு

3 எம்.எல்.சி.க்களுக்கு மந்திரி பதவி வழங்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் கவர்னர், முதல்-மந்திரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-09-01 21:48 GMT
பெங்களூரு,

கர்நாடக பா.ஜனதா சார்பில் ஆர்.சங்கர், எச்.விஸ்வநாத், எம்.டி.பி.நாகராஜ் ஆகியோர் சமீபத்தில் எம்.எல்.சி.க்களாக நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு மந்திரி பதவி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த மூன்று பேருக்கும் மந்திரி பதவி வழங்கக்கூடாது என்று அரசுக்கு உத்தரவிட கோரி கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பா.ஜனதா சார்பில் ஆர்.சங்கர், எச்.விஸ்வநாத், எம்.டி.பி.நாகராஜ் ஆகியோர் எம்.எல்.சி.க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மந்திரிசபையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அவர்களுக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள். அவர்கள் மீண்டும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் மட்டுமே மந்திரி பதவியை வகிக்க முடியும்.

சட்டத்திற்கு எதிரானது

மேல்-சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருப்பதால், அவர்கள் மந்திரி பதவியை ஏற்க தகுதி கிடையாது. அவர்களை மந்திரிசபையில் சேர்த்துக்கொள்வது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இதுகுறித்து கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த பொதுநல மனு, ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஒகா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “இது அரசியல் அமைப்பு சட்டம் தொடர்பான விவகாரம். அந்த 3 பேரையும் மந்திரிசபையில் சேர்த்துக்கொள்வதற்கு முன்பு அரசியல் அமைப்பு சட்ட அம்சங்களை முதல்-மந்திரி, கவர்னர் ஆகியோர் ஆராய்வார்கள்“ என்றனர். அதைத்தொடர்ந்து இதுகுறித்து விளக்கம் கேட்டு கவர்னர், கர்நாடக அரசு, முதல்-மந்திரி ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளர்.

மேலும் செய்திகள்