அனைத்து கோவில்களிலும் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதி நுழைவாயிலில் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று முதல் அனைத்து கோவில்களிலும் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது.

Update: 2020-09-01 23:48 GMT
நெல்லை,

கொரோனா பிரச்சினையினால் கடந்த மார்ச் 18-ந் தேதி வழிபாட்டு தலங்களை அடைப்பதற்கு அரசு உத்தரவிட்டது. கோவில்களில் அர்ச்சகர்கள் மட்டும் கால பூஜைகளை நடத்தலாம் என்றும், பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்படுகிறது என்றும் அரசு உத்தரவில் கூறப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஊரடங்கு தளர்வாக நேற்று முதல் அனைத்து கோவில்களிலும் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன்படி நெல்லையப்பர் கோவிலில் நேற்று காலை 6 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் கோவிலுக்குள் செல்வதற்கு வசதியாக சமூக இடைவெளி விட்டு வட்டங்கள் வரையப்பட்டிருந்தன. கோவிலுக்கு உள்ளே செல்லும்போது தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டது.

பூஜை பொருட்களுக்கு அனுமதியில்லை

பக்தர்கள் மூலஸ்தானம் அருகில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. கோவில் மகா மண்டபத்தில் இருந்து நெல்லையப்பரையும், காந்திமதியம்மனையும் தரிசனம் செய்தனர். பக்தர்கள் மண்டபத்தில் வைத்திருந்த தீபத்தை வணங்கி விட்டு வெளியே வந்தனர். பக்தர்கள் பூ மாலை, தேங்காய்பழம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. பக்தர்களுக்கு கோவில் பிரகாரத்தை சுற்ற அனுமதிக்கப்படவில்லை.

இதேபோல் பாளையங்கோட்டை சிவன்கோவில், புட்டாரத்தி அம்மன் கோவில், பேராத்து செல்வி அம்மன் கோவில், கரியமாணிக்கபெருமாள் கோவில், மேலவாசல் சுப்பிரமணியசுவாமி கோவில், சாலைகுமாரசாமி கோவில், குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி, தச்சநல்லூர் சிவன்கோவில் உள்ளிட்ட கோவில்களில் நேற்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தென்காசி

பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவில் நேற்று காலை பக்தர்கள் தரிசனத்திற்கு நடை திறக்கப்பட்டது. அவர்கள் சமூக இடைவெளியில் வரிசையாக நின்றனர். நுழைவுவாயிலில் அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்பநிலையும், ஆக்சிஜன் கருவி மூலம் ஆக்ஸிஜன் பரிசோதனையும் செய்யப்பட்டது. பின்னர் பக்தர்கள் கை மற்றும் கால்களை கழுவி கோவிலுக்குள் சென்றனர். கோவிலில் தரையில் வரையப்பட்டுள்ள வட்டத்தில் சமூக இடைவெளியில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இரவு 12 மணி வரை 1674 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி யக்ஞ நாராயணன் செய்திருந்தார்.

மேலும் செய்திகள்