வாணியம்பாடி அருகே, மண் கடத்தல் பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி 2 குழந்தைகள் பலி - போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம்

வாணியம்பாடி அருகே ஏரியில் மண் கடத்தல் கும்பல் தோண்டிய பள்ளத்தில் தேங்கிய நீரில் குளித்த 2 சிறுமிகள் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-09-01 22:00 GMT
வாணியம்பாடி, 

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த நாயனசெருவு கரடிகுட்டை கிராமம் மலையடிவார பகுதியில் உள்ளது. இந்த ஊரை சேர்ந்த திருப்பதி மகள் ஜனனி (வயது 6) அங்குள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள். அணேரியான்கொள்ளை பகுதியை சேர்ந்த சண்முகம் மகள் ரேகா (9) 4-ம் வகுப்பு மாணவி. இந்த நிலையில் ரேகா தனது பெற்றோருடன் கரடிகுட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு நேற்று காலை வந்திருந்தாள். அப்போது ரேகா மற்றும் ஜனனி ஆகிய 2 சிறுமிகளும் நேற்று பிற்பகல் வீட்டிலிருந்து அருகே உள்ள கரடிகுட்டை ஏரி அருகே குளித்து விளையாட சென்றுள்ளனர்.

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் குட்டையில் தண்ணீர் தேங்கியிருந்தது. மண் கடத்தல் கும்பல் அங்கு 7 அடி ஆழத்துக்கு தோண்டியிருந்ததால் குட்டைபோல் தண்ணீர் தேங்கியிருந்தது. இதனை அறியாமல் குளிக்க சென்ற 2 சிறுமிகளும் அதில் இறங்கி குளித்தபோது தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

விளையாட சென்ற சிறுமிகள் இருவரும் நேற்று மாலை 4 மணி ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் குட்டையில் மூழ்கி 2 சிறுமிகள் இறந்து கிடப்பதை அப்பகுதியை சேர்ந்த ஆடு மேய்ப்பர்கள் சிலர் பார்த்து தகவல் அளித்தனர்.

உடனடியாக கிராம மக்கள் அங்கு சென்று இறந்து கிடந்த சிறுமிகளின் உடல்களை மீட்டு ஏரி அருகே எடுத்து வந்தனர். தகவலறிந்த திம்மாம்பேட்டை மற்றும் நாட்றம்பள்ளி போலீசார், வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாட்றம்பள்ளி யூனியன் மூலம் ஏரியை பலப்படுத்த டெண்டர் விடப்பட்டது. ஆனால் ஏரிக்கரையை பலப்படுத்தாமல் அதிகாரிகளின் துணையோடு கரடிகுட்டை ஏரியில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் அளவுக்கு அதிகமாக பள்ளம் தோண்டி திருட்டுதனமாக பல லட்சங்களுக்கு மண்ணை விற்பனை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி போலீசார் மற்றும் வருவாய்துறையினரிடம் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு சடலத்தை எடுக்க விடாமல் நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவதத்களுடன் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரெண்டு பழனிசெல்வம், இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தசாமி, இருதயராஜ், தாசில்தார் சுமதி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி சடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

மேலும் செய்திகள்