பெங்களூருவில் கலவரத்தால் சேதமடைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீட்டை சித்தராமையா நேரில் பார்வையிட்டார்

பெங்களூருவில் கலவரத்தால் சேதமடைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீட்டை சித்தராமையா நேற்று நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில் இந்த வழக்கில் கைதானவர்களில், அப்பாவிகளை விடுவிக்க வலியுறுத்தியுள்ளார்.

Update: 2020-09-02 23:41 GMT
பெங்களூரு,

பெங்களூரு காவல் பைரசந்திராவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அகண்ட சீனிவாசமூர்த்தி எம்.எல்.ஏ.வின் (புலிகேசிநகர் தொகுதி) வீடு அமைந்துள்ளது. கடந்த ஆகஸ்டு 11-ந் தேதி அவரது உறவினர் ஒருவர் முகநூலில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்தால் வன்முறை வெடித்தது. அகண்ட சீனிவாசமூர்த்தியின் வீட்டை தாக்கியதுடன், தீவைத்து சேதப்படுத்தினர்.

இந்த சம்பவம் கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று அகண்ட சீனிவாசமூர்த்தியின் சேதமடைந்த வீட்டை நேரில் பார்வையிட்டார். மேலும் அந்தப் பகுதியில் சேதப்படுத்தப்பட்ட தனியார், அரசுக்கு சொந்தமான வாகனங்களையும் அவர் பார்வையிட்டார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடும் நடவடிக்கை

நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றேன். அதன் பிறகு வீட்டில் ஓய்வு எடுத்தேன். அதன் காரணமாக சம்பவம் நடந்த உடன் என்னால் இங்கு வர முடியவில்லை. இன்று (அதாவது நேற்று) இந்த பகுதியில் அகண்ட சீனிவாசமூர்த்தியின் வீட்டை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தேன். இந்த சம்பவத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த வழக்கில் போலீசார் பலரை கைது செய்துள்ளனர். இதில் அப்பாவிகள் சிலரும் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வந்துள்ளது. போலீசார் விசாரணைக்கு பிறகு அப்பாவிகள் என்று தெரியவந்தால் அவர்களை விடுவிக்க வேண்டும். இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும். தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். அப்பாவிகள் தண்டிக்கப்படக்கூடாது.

நீதி விசாரணை

இந்த சம்பவத்தில் உண்மைகள் வெளிவர வேண்டுமென்றால் நீதி விசாரணைக்கு உத்தரவிடுமாறு ஏற்கனவே வலியுறுத்தினேன். இப்போதும் இதே கருத்தை கூறுகிறேன். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை யார் மீதும் குற்றம் சுமத்த முடியாது.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

சேதங்களை பார்வையிட்டபோது, மீண்டும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்காமல் இருக்க சித்தராமையா முகக்கவசம், முகத்தை முழுமையாக மூடும் கண்ணாடி, கைகளை மறைக்கும் கையுறை போன்றவை அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்