திருமண நிகழ்ச்சிகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கவேண்டும் நாராயணசாமி வேண்டுகோள்

சுப, துக்க நிகழ்ச்சிகளில் கூட்டம் கூடுவதை மக்கள் தவிர்க்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2020-09-03 00:08 GMT
புதுச்சேரி,

புதுவைக்கு வந்த மத்தியக்குழு பல பரிந்துரைகளை வழங்கியுள்ளது. ஆனால் அதற்கு முன்பாகவே நாம் சில ஆயத்த வேலைகளை செய்துள்ளோம். கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஜிப்மரிலும் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் தொடர்பாகவும் நிறைய புகார்கள் வருகின்றன. டாக்டர்கள் வந்து நோயாளிகளை பார்ப்பதில்லை, உணவு சரியான நேரத்திற்கு வழங்குவதில்லை என்கின்றனர். தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் 100 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், அவை தவிர்த்து 200 படுக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கூட்டம் கூட வேண்டாம்

தனியார் ஆஸ்பத்திரிகளில் நிலவும் குறைகள் தொடர்பாக அந்த நிர்வாகங்களை அழைத்து பேச உள்ளோம். எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் மக்கள் அரசோடு ஒத்துழைக்கவேண்டும். மத்திய அரசு தற்போது தளர்வுகளை அறிவித்துள்ளது. தளர்வுகள் அதிகரிக்கும்போது நோய் பாதிப்பு அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. எனவே பொதுமக்கள் திருமணம், இறப்பு நிகழ்ச்சிகளில் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும்.

பெருகிவரும் நோயாளிகளுக்கு ஏற்ப மருத்துவ பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கழிப்பறை சரியில்லை என்ற புகாரின் அடிப்படையில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தார். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும் தங்கள் வீட்டு கழிவறையைப்போல் சுத்தமாக வைத்திருக்க உதவிட வேண்டும்.

வருவாய் குறைவு

மத்திய அரசு நமக்கு தரவேண்டிய நிதியை தரவில்லை. குறிப்பாக 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்தியதற்கான நிதி, ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தொகை, சரக்கு மற்றும் சேவை வரிக்கான 5 மாத இழப்பீடு ஆகியவை இன்னும் வழங்கப்படவில்லை. நமது மாநில வருவாயும் குறைந்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் நடந்த சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்களுக்கு மத்திய அரசு தரவேண்டிய இழப்பீட்டு தொகையை வழங்க வலியுறுத்தினோம். ஆனால் மத்திய நிதி மந்திரி அந்த தொகையை ரிசர்வ் வங்கியில் கடன் வாங்கிக்கொள்ள வேண்டும் என்றும் அதற்கு மத்திய அரசு உத்தரவாதம் அளிப்பதாகவும் கூறினார். அந்த தொகையை மாநில அரசுகளே 2 வருடத்தில் திருப்பி செலுத்த வேண்டுமாம். இதனை மாநில அரசுகள் ஏற்கவில்லை.

மாநில அரசுக்கான நிதியை மத்திய அரசுதான் வழங்கவேண்டும். ஏனெனில் எல்லா மாநிலங்களிலும் நிதிப்பற்றாக்குறை உள்ளது. இதுதொடர்பாக அடுத்த சரக்கு மற்றும் சேவைவரி கவுன்சில் கூட்டத்தில் மீண்டும் வலியுறுத்தப்படும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

மேலும் செய்திகள்