கிராமப்புறங்களில் பணியாற்றவே இளைஞர்கள் விரும்புகின்றனர் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேச்சு

கிராமப்புறங்களில் பணியாற்றவே இளைஞர்கள் விரும்புகின்றனர் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

Update: 2020-09-02 22:15 GMT
மதுரை,

தகவல் தொழில்நுட்பத்துறை மூலம் கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டம் குறித்து காணொலி கலந்தாய்வு கூட்டம் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடந்தது. இதில் தகவல் தொழில்நுட்பத்துறையின் முதன்மை செயலாளர் ஹன்ஸ்ராஜ்வர்மா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

கிராமப்புற இளைஞர்களுக்கு அந்தந்த மாவட்டத்திலேயே ஐ.டி.துறையில் பணி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கிராமத்திலேயே இருந்து கொண்டு தகவல் தொழில்நுட்ப வேலை வாய்ப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மார்ச் மாதத்தில் கணக்கெடுப்பு நடத்தியதில் இளைஞர்கள் கிராமப்புறங்களில் சொந்த ஊரிலிருந்து பணிபுரிய விரும்புவது தெரியவந்துள்ளது. எனவே அங்கு அடிப்படை கட்டமைப்புகளை விரிவுப்படுத்த நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. அதிக சம்பளத்துடன் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கொரோனா நோயாளிகளுக்கு மதுரை தொழில் வர்த்தக சங்க கட்டத்தில் உள்ள அம்மா கிச்சனில் தயார் செய்யப்படும் உணவுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறும்போது, மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மதுரை அரசு ஆஸ்பத்திரி, தோப்பூர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் கொரோனா கேர் சென்டர்களில் தங்கியுள்ள நோயாளிகள் அனைவரும் அம்மா கிச்சனில் தயாரிக்கப்படும் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. உணவே மருந்து என்பதை போல இங்கு தயார் செய்யும் உணவு மிகவும் ஆரோக்கியமாகவும், சத்தான உணவாக உள்ளது. அரசின் தீவிர நடவடிக்கை காரணமாக தான் மதுரையில் கொரோனா தொற்று குறைந்துள்ளது. கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் கடைசி நோயாளி உள்ள வரை அம்மா சிக்சன் மூலம் உணவு தடையில்லாமல் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்