கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு - மேட்டூர் அணை நீர்மட்டம் 89.50 அடியாக உயர்வு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதேபோல மேட்டூர் அணை நீர்மட்டம் 89.50 அடியாக உயர்ந்துள்ளது.

Update: 2020-09-03 22:30 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் மற்றும் தமிழக-கர்நாடக எல்லைகளில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை இந்த பகுதிகளில் கனமழை பெய்தது.

இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இந்த அளவு நேற்று 7 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

ஒகேனக்கல் காவிரி ஆற்று நீருடன் மழைநீரும் சேர்ந்து கரைபுரண்டு ஓடியது. ஒகேனக்கல்லில் உள்ள மெயின்அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் அருவி உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஒகேனக்கல் காவிரி ஆறு மற்றும் அருவிகளில் குளிக்க பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்திருப்பதால் ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து குறைந்து வந்தது. மேலும் அணைக்கு வரும் தண்ணீரின் அளவை விட வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகமாக இருந்ததால் அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வந்தது.

காவிரி டெல்டா பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு நேற்று முன்தினம் வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. அதே நேரத்தில் கால்வாய் பாசனத்துக்காக அணையில் இருந்து வினாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று அணைக்கு திடீரென்று தண்ணீர் வரத்து அதிகரித்தது. அதாவது நேற்று முன்தினம் வினாடிக்கு 6 ஆயிரத்து 522 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 17 ஆயிரத்து 937 கனஅடியாக அதிகரித்தது. அதாவது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ததால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததால், நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 89.01 அடியாக இருந்தது. நேற்று நீர்மட்டம் 89.50 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் நீர்மட்டம் மேலும் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்