நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் திருப்பம்: போதைப்பொருள் வியாபாரி கைது - 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு உத்தரவு

நடிகர் சுஷாந்த்சிங் மரண வழக்கில் திடீர் திருப்பமாக போதைப்பொருள் வியாபாரி கைது செய்யப்பட்டார். அவரை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2020-09-04 01:15 GMT
மும்பை,

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்கில் பிணமாக மீட்கப்பட்டார். சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியது, பண மோசடியில் ஈடுபட்டதாக அவரின் காதலியும், நடிகையுமான ரியா சக்கரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.

மேலும் பணமோசடி தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரித்தது. அமலாக்கத்துறையின் விசாரணையின் போது ரியாவின் வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் அவருக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது குறித்து என்.சி.பி. எனப்படும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் ரியா மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கை போதைப்பொருள் வழக்குடன் தொடர்புபடுத்தி விசாரித்து வருகின்றனர்.

இந்தநிலையில் மும்பையில் கடந்த சில நாட்களுக்கு முன் அப்பாஸ் லக்கானி, கரன் அரோரா ஆகிய 2 பேர் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதாக மும்பையில் உணவகம் நடத்தி வந்த ஜாயித் விலாத்ராவ் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் போதைப்பொருள் தொடர்பில் ஜாயித் விலாத்ராவ் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.9½ லட்சம் மற்றும் வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்தனர்.

இந்தநிலையில் ஜாயித் விலாத்ராவை நேற்று போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மும்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது அவர் போதைப்பொருள் தொடர்பு குறித்து பலரின் பெயர்களை கூறியுள்ளதாக கோர்ட்டில் அவர்கள் கூறினர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டியது இருப்பதால், ஜாயித் விலாத்ராவை தங்களது காவலில் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இதையடுத்து கோர்ட்டு அவரை வருகிற 9-ந் தேதி வரை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சுஷாந்த் சிங் மரண வழக்கில் போதைப்பொருள் கோணத்திலும் விசாரித்து வருவதால் இது முக்கியமானது ஆகும். மேலும் மும்பையில் குறிப்பாக இந்தி திரையுலகில் உள்ள போதைப்பொருள் கூடாரத்தை அகற்ற விசாரணை நடத்த வேண்டி உள்ளது’’ என்றார்.

இதற்கிடையே ஜாயித் விலாத்ராவிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கட்டாயப்படுத்தி வாக்குமூலங்களை பெற்றதாக அவரது வக்கீல் குற்றம்சாட்டி உள்ளார்.

இந்தி திரையுலகில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து இருப்பதாக சமீபகாலமாக சர்ச்சை ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த வழக்கின் மூலம் திரையுலகை சேர்ந்த பலர் போதைப்பொருள் வழக்கில் சிக்கலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்