பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

Update: 2020-09-04 16:36 GMT
பவானிசாகர்,

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. அணையில் இருந்து கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் வாய்க்கால்களில் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மேலும் ஈரோடு மாநகராட்சி, கோபி, பவானி, சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி ஆகிய நகராட்சிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் குடிநீர் வசதி பெறுகின்றன. இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

தண்ணீர் வரத்து அதிகரிப்பு

நேற்று முன்தினம் மதியம் 12 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 99.50 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 972 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்காலில் வினாடிக்கு 800 கன அடி, காலிங்கராயன் வாய்க்காலில் வினாடிக்கு 200 கன அடி, கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி என மொத்தம் வினாடிக்கு 3 ஆயிரத்து 300 கன அடி திறந்துவிடப்பட்டது.

நேற்று மதியம் 12 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 99.44 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 107 கன அடியாக அதிகரித்து தண்ணீர் வந்தது. அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்காலில் வினாடிக்கு 800 கன அடி, கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி என மொத்தம் வினாடிக்கு 3 ஆயிரத்து 100 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்துவிடப்படவில்லை.

மேலும் செய்திகள்