டி.ஜே.ஹள்ளி கலவரம்: உண்மை கண்டறியும் குழு எடியூரப்பாவிடம் அறிக்கை தாக்கல்

பெங்களூரு டி.ஜே.ஹள்ளியில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் உண்மை கண்டறியும் குழு அறிக்கை தாக்கல் வழங்கியது. அதில், மத நோக்கத்துடன் அரங்கேற்றப்பட்டது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Update: 2020-09-04 20:10 GMT
பெங்களூரு,

பெங்களூரு புலிகேசிநகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அகண்ட சீனிவாசமூர்த்தி. அவரது வீடு காவல் பைரசந்திராவில் உள்ளது. இந்த நிலையில் அகண்ட சீனிவாசமூர்த்தியின் நெருங்கிய உறவினர் நவீன் என்பவர், முஸ்லிம்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்தை வெளியிட்டார்.

இதனால் கடந்த ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி, காவல் பைரசந்திராவில் கலவரம் வெடித்து, அகண்ட சீனிவாசமூர்த்தியின் வீடு உள்பட 3 பேரின் வீடுகள் சூறையாடப்பட்டது. இந்த கலவரம், கர்நாடகம் மட்டுமின்றி நாடு தழுவிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 350-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

உண்மை கண்டறியும் குழு

இந்த வன்முறை தொடர்பாக மாவட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஸ்ரீகாந்தி பபல்வாடி தலைமையில் உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தி வந்தது. இந்த குழுவினர் ஜனநாயகத்திற்கான குடிமக்கள் அமைப்பு சார்பில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ். அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் வன்முறை நடந்த டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி, காவல் பைரசந்திரா ஆகிய பகுதிகளை நேரில் ஆய்வு செய்தனர். மேலும் சேதமடைந்த வீடுகள், வாகனங்களை பார்வையிட்டனர்.

அத்துடன் அந்தப் பகுதிகளில் வசித்து வரும் மக்களிடமும் விசாரணை நடத்தி அந்த குழு வாக்குமூலம் பெற்றது. அந்த உண்மை கண்டறியும் குழு அறிக்கையை தயார்படுத்தியது. இந்த நிலையில் அந்த குழுவினர் பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி எடியூரப்பாவை நேரில் சந்தித்து அறிக்கையை வழங்கினர். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடுமையாக தாக்கி தீ

புலிகேசிநகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அகண்ட சீனிவாசமூர்த்தியின் வீடு காவல் பைரசந்திராவில் உள்ளது. அவரது உறவினர் நவீன் என்பவர் டுவிட்டரில் வெளியிட்ட கருத்தால் சர்ச்சை எழுந்தது. இதனால் முஸ்லிம் இளைஞர்கள் 3,000 பேர் ஒன்றுகூடி அகண்ட சீனிவாசமூர்த்தி, நவீனின் வீடு மற்றும் கே.ஜி.ஹள்ளி, டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையங்களை ஒரே நேரத்தில் தாக்கியுள்ளனர்.

மேலும் அருகில் இருந்த இந்துக்களின் வீடுகள், அரசு-தனியார் வாகனங்களை கடுமையாக தாக்கி தீ வைத்தனர். நிலைமை மோசமானதை அடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டை வீசினர். துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டனர். இந்த கலவரத்தில் சேதம் அடைந்த பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.10 கோடி முதல் ரூ.15 கோடி வரை இருக்கும். இந்த கலவரம் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது.

இது மத நோக்கம்

இது மக்களின் நம்பிக்கையை குறைக்கும் வகையில் மாநிலத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். இந்த வன்முறையில் உள்ளூர் பிரமுகர்களுக்கும் தொடர்பு உள்ளது. அவர்களுக்கு இந்த கலவரம் குறித்த தகவல் முன்கூட்டியே தெரியும். இது மத நோக்கம் கொண்டு அரங்கேற்றப்பட்ட சம்பவம். இந்த சம்பவத்தில் எஸ்.டி.பி.ஐ., பி.எப்.ஐ. ஆகிய அமைப்பை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு உள்ளனர். சேதத்திற்கான இழப்பீட்டை சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த குழு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்