போலி ஆவணம் தயாரித்து ரூ.2 கோடி அரசு நிலத்தை மோசடி செய்து விற்ற 2 பேர் கைது

திருவள்ளூர் அருகே போலி ஆவணம் தயாரித்து ரூ.2 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை விற்றதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-09-04 21:54 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த செங்குன்றம் ஜி.என்.டி. சாலை சர்ச் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 42). இவர் சென்னை அண்ணாநகரில் லாரி சர்வீஸ் வைத்து நடத்தி வருகிறார். இவரது தந்தை தாமோதரன் கடந்த 2017-ம் ஆண்டு பொன்னேரி தாலுகாவிற்கு உட்பட்ட பஞ்செட்டி கிராமத்தில் லாரி டிரான்ஸ்போர்டு அலுவலகம் கட்டுவதற்காக ரூ.2 கோடியே 7 லட்சத்து 49 ஆயிரத்து 560 மதிப்புள்ள ஒரு ஏக்கர் ஒரு சென்ட் நிலத்தை வாங்கினார்.

இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு தாமோதரன் இறந்து போன நிலையில், அவரது மகன் முத்துக்குமார் பஞ்செட்டி கிராமத்தில் தன் தந்தை வாங்கிய நிலத்தில் கட்டிடம் கட்டுமான பணிகளை மேற்கொள்ள பத்திரத்தை தேடியபோது, பத்திரம் இல்லை என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த நிலத்தை விற்பனை செய்த அம்பத்தூரை அடுத்த கள்ளிக்குப்பத்தை சேர்ந்த சுடலைமுத்து (45), செங்குன்றத்தை சேர்ந்த சுரேஷ் (40) மற்றும் கவுரி ஆகியோரிடம் கேட்ட போது, அந்த இடத்திற்கு பட்டா வாங்கி தருவதாக கூறி அவரை சமாதானம் செய்தனர்.

2 பேர் கைது

மேலும் மேற்கண்ட மூன்று பேரும் கடந்த 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால், சந்தேகமடைந்த முத்துக்குமார், இது தொடர்பாக பொன்னேரியில் உள்ள தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று விசாரணை செய்தார். விசாரணையில் அந்த இடம் அரசு புறம்போக்கு நிலம் என தெரியவந்தது. மேலும் சுடலைமுத்து, சுரேஷ் ஆகியோர் போலி ஆவணம் தயாரித்து அந்த இடத்தை விற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்து முத்துகுமார் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தனிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின்பேரில், திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு கந்தகுமார், இன்ஸ்பெக்டர் லில்லி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த சுரேஷ் மற்றும் சுடலைமுத்து ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்து கும்மிடிப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கவுரி என்ற பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்