மதுக்கடையை அகற்றக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட பெண்கள் முயற்சி - போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு

வேளாங்கண்ணி அருகே மதுக்கடையை அகற்றக்கோரி பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-09-04 22:15 GMT
வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள விழுந்தமாவடியில் வேதாரண்யம் செல்லும் சாலை ஓரத்தில் அரசு மதுக்கடை உள்ளது இந்த மதுக்கடை பஸ் நிறுத்தம் அருகே உள்ளதால் இரவு நேரத்தில் இந்த வழியாக செல்லும் பெண்கள் அச்ச உணர்வுடன் சென்று வந்தனர். இந்த கடையை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் காரணமாக கடை மூடப்பட்டது.

இந்தநிலையில் கடந்த மாதம் 18-ந் தேதி மீண்டும் அதே இடத்தில் மதுக்கடை திறக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று விழுந்தமாவடியை சேர்ந்த பெண்கள் அங்கு உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி மீண்டும் முற்றுகை போராட்டம் நடத்த முயற்சி செய்தனர். இதனால் அப்பகுதியில் ஏராளமான பெண்கள் திரண்டனர். எனவே சம்பவ இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வர கால தாமதம் ஆனது. இதனால் பெண்கள் நீண்ட நேரம் அங்கு காத்திருந்ததால் சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த டாஸ்மாக் கிடங்கு மேலாளர் சேதுராமலிங்கம், கீழ்வேளூர் தாசில்தார் கார்த்திகேயன், நாகை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேலு, இன்ஸ்பெக்டர்கள் ஆரோக்கியராஜ், ஆனந்தகுமார், தியாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டம் நடத்திய பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அதிகாரிகள் தற்போது மதுக்கடையை மூடி வைப்பது என்றும் விரைவில் இந்த மதுக்கடை வேறு இடத்தில் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

மேலும் செய்திகள்