கூடுதல் கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு: சாலையில் காய்கறிகளை கொட்டி வியாபாரிகள் போராட்டம் - சேலத்தில் பரபரப்பு

கூடுதல் கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் சாலையில் காய்கறிகளை கொட்டி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Update: 2020-09-04 22:00 GMT
சேலம்,

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமணிமுத்தாறு ஆற்றோர பகுதியில் 200-க்கும் மேற்பட்ட சிறுவியாபாரிகள் காய்கறிகடை நடத்தி வந்தனர். இவர்களிடம் தினமும் வாடகை வசூலிக்க 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை டெண்டர் விடப்படுகிறது. இந்த நிலையில் தற்போது புதிதாக டெண்டர் எடுத்த நபர், காய்கறி கடை வைத்திருக்கும் சிறு வியாபாரிகளிடம் ஒரு கடைக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை திருப்பி தராத முன்பணம் கொடுத்தால் மட்டுமே கடை வைக்க அனுமதி கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில் ஆனந்தா இறக்கம் காய்கறி மார்க்கெட்டில் கூடுதல் கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்தும், காய்கறி டெண்டரை ரத்து செய்யக்கோரியும் நேற்று 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் காய்கறிகளை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அவர்கள் கொரோனா ஊரடங்கால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது, எனவே பழைய முறைப்படி சுங்க கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பெண் வியாபாரிகள் அனைவரும் ஒப்பாரி வைத்து அழுதனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட சாலையோர வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் மாநகராட்சி அதிகாரிகளும் அங்கு வந்தனர். அப்போது, சிறு வியாபாரிகளுக்கு பழைய இடத்தில் கடை வைக்க அனுமதி வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட சாலையோர வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண் வியாபாரிகள் கூறுகையில், ஆனந்தா இறக்கம் காய்கறி மார்க்கெட்டில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறோம். ஆனால் தற்போது கூடுதல் கடைகள் கட்டி முடித்து கடைகளுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கும் உரிமம் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவர் ஒரு கடைக்கு முன் பணமாக ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கேட்டு மிரட்டி வருகிறார். இவ்வளவு பெரிய தொகையை எங்களால் கொடுக்க முடியாது. எனவே இதற்கு முன்பு இருந்தது போல் குறைந்த அளவு சுங்க கட்டணத்தை தினமும் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எனவே எங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க சேலம் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

மேலும் செய்திகள்