வேலூர் மண்டித்தெருவில் 100 ஆண்டு பழமையான அரசமரம் வேருடன் சாய்ந்தது 2 பேர் படுகாயம்; வாகனங்களும் சேதம்

வேலூர் மண்டித்தெருவில் 100 ஆண்டுகள் பழமையான அரசமரம் வேரோடு சாய்ந்தது. அதில் சுமைத்தூக்கும் தொழிலாளி உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். கார், மோட்டார்சைக்கிள்கள், தள்ளுவண்டி உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்தன.

Update: 2020-09-06 12:29 GMT
வேலூர்,

வேலூர் மாநகரின் வியாபார மையமாக வேலூர் மண்டித்தெரு காணப்படுகிறது. இந்தத் தெருவின் இருபுறமும் அரிசி, பருப்பு, எண்ணெய், நவ தானியப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான மளிகைப் பொருட்களின் மொத்த விற்பனை கடைகள் உள்ளன. இங்குள்ள கடைக்கு பிற மாநிலங்கள், பல்வேறு மாவட்டங்களில் இருந்து லாரிகளில் பல வகையான பொருட்களை கொண்டு வந்து இறக்குவதும், இங்கிருந்து சிறு வணிக கடைகளுக்கு பல்வேறு மளிகைப் பொருட்களை ஏற்றி அனுப்பி வைப்பதும் என எந்த நேரமும் மண்டித்தெரு பரபரப்பாகக் காணப்படும். இந்தத் தெருவோரத்தில் 100 ஆண்டு கால பழமையான அரசமரம் பரந்து விரிந்து காணப்பட்டது.

இந்த மரத்தின் அடியில் சுமைத்தூக்கும் தொழிலாளர்கள், சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுபவர்கள் ஓய்வெடுப்பது வழக்கம். இங்கு தள்ளுவண்டியில் கூழ், சிற்றுண்டியும் விற்பனை செய்யப்படும். நேற்று காலை 10 மணியளவில் அரசமரம் வேருடன் சாய்ந்து சாலையின் நடுவே விழுந்தது. இதில், மரத்தின் அருகே நின்று கொண்டிருந்த சுமைத்தூக்கும் தொழிலாளி உள்பட 2 பேர் மரக்கிளைகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர். அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார், 4 மோட்டார்சைக்கிள்கள், தள்ளுவண்டி, மாடுடன் நிறுத்தப்பட்டிந்த மாட்டுவண்டி ஆகியவை சேதமடைந்தன.

இதைக்கண்ட பொதுமக்கள் மற்றும் கடை வியாபாரிகள், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் அங்குச் சென்று படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள், போக்குவரத்துப் போலீஸ் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்புப்படை வீரர்கள், மாநகராட்சி ஊழியர்கள் அங்குச் சென்று மரத்தின் அடியில் சிக்கிய வாகனங்களை முதல் கட்டமாக அப்புறப்படுத்தினர். பின்னர் 5 மணி நேர போராட்டத்துக்கு பின்னர், விழுந்த அரசமரம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 100 ஆண்டுகளுக்கு மேலாக காணப்பட்ட அரசமரத்தையொட்டி கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. அதனால் மரத்தின் ஒருபுறத்தின் வேர்கள் வலுவிழந்தன. கடந்த சிலநாட்களாக பெய்த மழையின் காரணமாக மேலும் வேர்கள் வலுவிழந்து சாலையில் விழுந்தது. அந்த சமயம் மரத்தடியில் மற்றும் சாலையில் பொதுமக்கள் கூட்டம் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்தப் பகுதியில் உள்ள மின்கம்பங்கள், மற்ற மரங்களும் இதேபோல் எந்த நேரத்திலும் விழும் அபாயம் உள்ளது. அவற்றை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்