போதைப்பொருட்கள் விற்பனை விவகாரத்தில் பெங்களூரு மாநகராட்சி கவுன்சிலர் மகனுக்கு சம்மன்

போதைப்பொருட்கள் விற்பனை விவகாரத்தில் பெங்களூரு மாநகராட்சி கவுன்சிலரின் மகனுக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன்பு அவர் இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.

Update: 2020-09-06 20:41 GMT
பெங்களூரு,

இந்தி திரைப்பட உலகில் முன்னணி நடிகராக இருந்து வந்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர், சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலையில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது. மேலும் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் குடும்பத்தினர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். தற்போது நடிகர் சுஷாந்த் தற்கொலை குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதிகாரிகள் நடத்திய விசாரணையின் போது ரியா மற்றும் அப்துல் ரகுமான் ஆகிய 2 பேரும் சிக்கி இருந்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போதைப்பொருட்கள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போதைப்பொருள் விற்பனை தொடர்பான விசாரணையை சி.பி.ஐ. அதிகாரிகள், மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு மாற்றி இருந்தனர். அதன்பேரில், மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ரியா, அப்துல் ரகுமானிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

கவுன்சிலர் மகனுக்கு சம்மன்

இந்த நிலையில், அப்துல் ரகுமானிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பெங்களூரு மாநகராட்சி மகாலட்சுமிபுரம் வார்டு கவுன்சிலரான கேசவமூர்த்தியின் மகன் யசஷ் என்பவருக்கு போதைப்பொருள் விற்பனை மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தியதில் தொடர்பு இருப்பது பற்றி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, கவுன்சிலர் கேசவமூர்த்திக்கு சொந்தமான பெங்களூரு ராஜாஜிநகர் 3-வது பிளாக்கில் உள்ள வீட்டில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த சோதனையின் போது கவுன்சிலர் மகன் பற்றிய தகவல்கள் அதிகாரிகளுக்கு கிடைத்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்படுத்திய விவகாரத்தில் கவுன்சிலர் கேசவமூர்த்தியின் மகன் யசஷ் வருகிற 7-ந் தேதி (அதாவது இன்று) விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பி வைத்துள்ளனர். அதாவது இன்று (திங்கட்கிழமை) காலை 10.30 மணியளவில் மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் யசஷ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும், அவ்வாறு ஆஜராகாத பட்சத்தில் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு ஆஜராவார்

இதுகுறித்து மாநகராட்சி மகாலட்சுமிபுரம் காங்கிரஸ் கவுன்சிலரான கேசவமூர்த்தி நேற்று நிருபர்களிடம் கூறுகையில், எனது மகனுக்கு மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருப்பது உண்மை தான். எனது மகன் உடற்பயிற்சி மையம் நடத்தி வருகிறார். எனது மகன் விசாரணைக்கு ஆஜராக உள்ளார். இதற்காக பெங்களூருவில் இருந்து அவர் மும்பைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். நாளை (இன்று) காலையில் அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார். போதைப்பொருள் விற்பனை கும்பலுக்கும் எனது மகனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.

பெங்களூருவில் போதைப்பொருள் விவகாரத்தில் கன்னட திரை உலகத்தை சேர்ந்த நடிகைகள், தொழில்அதிபர்கள் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மாநகராட்சி கவுன்சிலரின் மகனுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்