பஸ் போக்குவரத்து தொடக்கம்: தென்காசி தினசரி சந்தையை திறக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

பஸ் போக்குவரத்து தொடங்கியதால் தென்காசி தினசரி சந்தையை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-09-07 00:05 GMT
தென்காசி,

கொடிய நோயான கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பல வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. தென்காசி நகரில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடமான அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகிலுள்ள தினசரி சந்தை இதன் காரணமாக மூடப்பட்டது.

இங்கிருந்த கடைகள் தென்காசி பழைய பஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டன. பொதுமக்கள் பழைய பஸ் நிலையத்திற்கு சென்று காய்கறிகளை வாங்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இ-பாஸ் ரத்து செய்யப்பட்டது. பல்வேறு தளர்வுகள் அரசால் அறிவிக்கப்பட்டது.

பொதுமக்கள் கோரிக்கை

கடந்த 1-ந் தேதி முதல் பொது போக்குவரத்து மாவட்டத்திற்குள் தொடங்கியது. இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு பஸ்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது தென்காசி பழைய பஸ் நிலையத்தில் பஸ்கள் வந்து செல்கின்றன. காய்கறி கடைகளும் அங்கு இயங்கி வருகின்றன.

காய்கறிகள் வாங்க பொதுமக்களும், வெளியூர்களுக்கு செல்ல பயணிகளும் வருவதால் அங்கு நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் பொது மக்கள் கஷ்டப்படுகிறார்கள். எனவே தினசரி சந்தையை திறந்து விட்டு பழைய பஸ் நிலையத்தில் உள்ள காய்கறி கடைகளை மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்