கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மராட்டிய சட்டசபை கூடியது முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு புகழஞ்சலி

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மராட்டிய சட்டசபை கூடியது. இதில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது.

Update: 2020-09-07 19:40 GMT
மும்பை,

மராட்டிய சட்டசபை மழைக்கால கூட்டத் தொடர் கொரோனா பரவல் காரணமாக 2 நாட்கள் மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று காலை சட்டசபை கூடியது. இதில் கொரோனா பரிசோதனை செய்து, தொற்று இல்லை என்ற சான்று பெற்ற எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே சட்டசபைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

அனைத்து எம்.எல்.ஏ.க்களும் முக கவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி அவர்கள் முக கவசம் அணிந்து வந்தனர். மேலும் சட்டசபையில் இருக்கைகள் இடைவெளி விட்டு போடப்பட்டு இருந்தன.

சபாநாயகர் நானா படோலேவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதால் அவர் சட்டசபைக்கு வரவில்லை. அவருக்கு பதிலாக துணை சபாநாயகர் நர்காரி ஷிர்வால் கூட்டத்தை வழிநடத்தினார்.

பிரணாப் முகர்ஜிக்கு புகழஞ்சலி

இந்த கூட்டத்தில் சமீபத்தில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி சிவாஜிராவ் பாட்டீல் நிலங்கேகர் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் பேசிய உறுப்பினர்கள் அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தினர்.

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசும்போது, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது தந்தை பால்தாக்கரேயுடன் வைத்திந்த உறவை பற்றி நினைவு கூர்ந்தார். இதுபற்றி அவர் கூறுகையில், “ஜனாதிபதி தேர்தலில் தங்களது கட்சி அவருக்கு ஆதரவு அளித்தது. அவர் ஆதரவு கேட்டு எனது தந்தையை சந்திக்க சரத்பவாருடன் எங்களது வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது நான் அவரை முதல் தடவையாக நேரில் சந்தித்தேன். அவர் ஜனாதிபதியாக இருந்தபோது, தனது மகன் ஆதித்ய தாக்கரேயுடன் அவரை சந்தித்தேன். அப்போது அவர் ஜனாதிபதி என்பதை மறந்து சாதாரண மனிதனை போல பழகினார். அவர் மற்றவர்களுடன் பழகும்போது உணர்ச்சி மிகுந்த மனிதாபிமானத்தை கடைப்பிடிப்பவர் என்பதை உணர்ந்தேன்” என்று புகழஞ்சலி சூட்டினார்.

ஆர்.எஸ்.எஸ். மாநாட்டில்...

எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் பேசும்போது, “மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சிறந்த நாடாளுமன்றவாதி. அவர் வாஜ்பாய், மோடி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்களுடன் சிறந்த நட்பு வைத்திருந்தார். மோடிக்கு பாதுகாவலராக விளங்கினார். ஆர்.எஸ்.எஸ். மாநாட்டில் கலந்து கொண்டு அவர் தேசியவாதம் பற்றி பேசியது அனைவரையும் கவர்ந்தது” என்றார்.

துணை முதல்-மந்திரி அஜித்பவார், பலரது எதிப்பையும் மீறி பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். மாநாட்டில் கலந்து கொண்டு தனது சொந்த கருத்தை தெரிவித்தார். அவர் காங்கிரஸ் சித்தாந்தத்தை கொண்டவர் என்று பேசினார்.

இதைத் தொடர்ந்து பேசிய உறுப்பினர்களும் மறைந்த தலைவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தினர்.

துணை மானிய கோரிக்கை

பின்னர் 2020-2021-ம் நிதியாண்டின் ரூ.29 ஆயிரத்து 84 கோடிக்கான துணை மானிய கோரிக்கைளை துணை முதல்-மந்திரியும், நிதி மந்திரியுமான அஜித்பவார் சட்டசபையில் தாக்கல் செய்தார்.

இதில் அதிகப்பட்சமாக விவசாயிகள் கடனுக்காக ரூ.10 ஆயிரத்து 500 கோடியும், சுகாதார மற்றும் மருத்துவ கல்விக்காக ரூ.2,100 கோடியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்