புதுச்சேரி எல்லை வரை வந்த தமிழக அரசு பஸ்கள்

புதுச்சேரி எல்லைப் பகுதிகள் வரை தமிழக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

Update: 2020-09-07 21:07 GMT
புதுச்சேரி,

கொரோனாவால் விதிக்கப்பட்டு இருந்த தடை விலக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் நேற்று முதல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் இருந்து கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் புதுச்சேரி வழியாக இயக்கப்படுவது வழக்கம்.

ஆனால் ஒரு மாநிலத்துக்கு சொந்தமான பஸ் பிற மாநில வழித்தடத்தில் செல்ல வேண்டும் என்றால் அதற்கு அனுமதி பெற வேண்டியது அவசியம். இதுகுறித்து மாநிலங்களுக்கிடையே விதிகள் வகுக்கப்பட்டு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி தமிழக அரசின் அனுமதி பெற்று காரைக்காலுக்கு தற்போது புதுச்சேரி அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

முடங்கிய பஸ்கள்

அதேபோல் புதுச்சேரி வழியாக தமிழக அரசு பஸ்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தபோதிலும் அதுகுறித்து புதுவை அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வருகிறது.

இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்படும் தமிழக அரசு பஸ்கள் எதுவும் புதுச்சேரி பகுதிக்குள் நேற்று இயக்கப்படவில்லை. அதேபோல் புதுவையில் உள்ள பணி மனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழக அரசு பஸ்களும் இயக்கப்படாமல் முடங்கிப் போயின.

எல்லை வரை வந்தன

தமிழக அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் புதுவையில் உள்ள பணிமனைகளுக்கு டிரைவர், கண்டக்டர்கள் நேற்று காலை பணிக்கு வந்திருந்தனர். ஆனால் புதுவை அரசு அனுமதி அளிக்காததால் ஏமாற்றத்துடன் அவர்கள் திரும்பிச் சென்றனர். இந்தநிலையில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான 62 பஸ்களில் 9 பஸ்கள் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கு இயக்கப்பட்டன.

சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து வந்த தமிழக அரசு பஸ்கள் புதுவை மாநிலத்துக்குள் நுழையாமல் எல்லை பகுதியான கோரிமேடு, மதகடிப்பட்டு, கனகசெட்டிகுளம், முள்ளோடை பகுதிவரை வந்து மாற்று வழியில் சென்றன. இந்த பகுதியில் வந்து இறங்கிய பயணிகள் புதுவை எல்லைக்குள் நடந்தே வந்தனர்.

மேலும் செய்திகள்