கலெக்டர் அலுவலகம் முன்பு தொழிலாளி தீக்குளிக்க முயற்சி - கடலூரில் பரபரப்பு

கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தொழிலாளி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-09-08 05:00 GMT
கடலூர்,

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை 11.30 மணி அளவில் 57 வயது மதிக்கத்தக்க ஒருவர், தனது மனைவி மற்றும் 3 மகள்களுடன் மனு கொடுக்க வந்தார். அப்போது கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி, அங்கு வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டியில் மனுவை போடுமாறு கூறினர். இதற்கிடையே அந்த நபர் தான் கேனில் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், அவரது கையில் இருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கி, அவர் மீது தண்ணீரை ஊற்றி ஆசுவாசப்படுத்தினர்.

பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், குறிஞ்சிப்பாடி அருகே உள்ள தங்களிக்குப்பம் பகுதியை சேர்ந்த தொழிலாளி சுப்பிரமணியன் என்கிற அர்ஜூனன் (வயது 57) என்பதும், இவர் வசித்து வரும் வீட்டை அதே பகுதியை சேர்ந்த 2 பேர், தங்களுக்கு சொந்தமான இடம் என்று கூறி, வீட்டை காலி செய்யுமாறு மிரட்டி வருவதும் தெரிந்தது. மேலும் வீட்டை காலி செய்யாவிட்டால், உடனே இடித்து விடுவோம் என்றும் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, தீக்குளிக்க முயன்றது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார், அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்