தென்காசி புதிய பஸ் நிலைய நுழைவுவாயிலில் போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

தென்காசி புதிய பஸ் நிலைய நுழைவுவாயிலில் போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-09-08 23:50 GMT
தென்காசி,

நெல்லை மாவட்டத்தில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டு, தென்காசியை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் இயங்கி வருகிறது. நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நகரமான தென்காசியில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் குற்றாலம் உள்ளது. மேலும் கேரள எல்லை சுமார் 15 கி.மீ. தூரத்தில் உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கியுள்ளது.

இதனால் ஏராளமான வாகனங்கள் தென்காசி நகருக்குள் வந்து செல்கின்றன. சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, அம்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஏராளமானவர்கள் வாகனங்களில் தென்காசிக்கு வந்து செல்கின்றனர். தென்காசி அருகில் உள்ள குற்றாலத்துக்கும் சென்று வர தவறுவது இல்லை.

போக்குவரத்து சிக்னல்

பொது போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டதால், தென்காசி புதிய பஸ் நிலையத்துக்கு ஏராளமான பஸ்கள் வந்து செல்கின்றன. தென்காசி புதிய பஸ் நிலையத்தின் நுழைவுவாயிலுக்கு அடுத்து மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இதற்கு அடுத்து ஐ.சி.ஐ. அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பகுதியில்தான் மாவட்ட கலெக்டரின் முகாம் அலுவலகம் உள்ளது. இதற்கு நேர் எதிரே விரைவு நீதிமன்றம், கூடுதல் அமர்வு நீதிமன்றங்கள் உள்ளன. இதனால் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் செல்லும் நேரத்தில் ஆஸ்பத்திரிக்கும் வாகனங்கள் செல்கின்றன.

காலை, மாலை வேளைகளில் பள்ளி மாணவர்கள் இந்த வழியாக செல்கின்றனர். இதனால் இந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே தென்காசி புதிய பஸ் நிலைய நுழைவுவாயில் பகுதியில் போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்