போலீஸ் நிலையம் செல்ல தேவையில்லை: குழந்தைகள் மீதான வன்முறைக்கு இணையதளத்திலேயே புகார் செய்யலாம் - கலெக்டர் ஆனந்த் தகவல்

குழந்தைகள் மீதான வன்முறைகளுக்கு போலீஸ் நிலையம் செல்லாமல் இணையதளத்திலேயே புகாரினை பதிவு செய்யலாம் என கலெக்டர் ஆனந்த் தெரிவித்தார்.

Update: 2020-09-09 14:30 GMT
திருவாரூர், 

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான வி்ழிப்புணர்வு மற்றும் தொடர்பு கொள்வதற்கான முகவரி, தொலைபேசி எண்கள் குறித்த பதாகையினை மாவட்ட கலெக்டர் ஆனந்த் திறந்து வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுத்திட அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குழந்தைகள் மீதான வன்முறைகளுக்கு போலீஸ் நிலையம் செல்லாமல் இணையதளத்திலேயே புகாரினை பதிவு செய்யலாம்.

அதற்கான செயலி குறித்து விவரங்கள் அடங்கிய பதாகைகள் மக்கள் அதிக கூடும் இடங்களான மாவட்ட கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பஸ் நிலையங்கள், மற்றும் 33 போலீஸ் நிலையங்களில் வைக்கப்பட்டு உள்ளது. எனவே குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அனைவரும் ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்புத்துறை நன்னடத்தை அலுவலர் பால் இக்னேஷியஸ் சேவியர்ராஜ், குழந்தைகள் நல குழுத்தலைவர் ஜீவானந்தம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் முத்தமிழ்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்