முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டி இருப்பதால் சட்டசபை கூட்டத்தை 3 வாரம் நீட்டிக்க வேண்டும்

முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டி இருப்பதால், சட்டசபை கூட்டத்தை 3 வாரம் நீட்டிக்க வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.

Update: 2020-09-09 20:59 GMT
பெங்களூரு,

கர்நாடக சட்டசபை கூட்டம் வருகிற 21-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி 8 வேலை நாட்கள் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தொடரில் 20 அவசர சட்டங்கள் உள்பட 35-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு கர்நாடக மக்கள் கஷ்டத்தில் சிக்கியுள்ளனர்.

அடிக்கடி வெள்ள பாதிப்புகள் வருகின்றன. உயிர்க்கொல்லியான கொரோனா வைரஸ் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பரவி, மாநில மக்களின் வாழ்வாதாரத்தை முடக்கிவிட்டது. இந்த வைரஸ் காரணமாக 6,500-க்கும் மேற்பட்டவர்கள் மரணம் அடைந்துள்ளனர். அடிக்கடி சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக போதைப்பொருள் நடமாட்டம் மாநிலத்தில் அதிகரித்துள்ளது.

சட்டமன்ற நடைமுறை

இத்தகைய சூழ்நிலையில் கர்நாடக சட்டசபை கூட்டம் நடத்தப்படுகிறது. இவ்வளவு விஷயங்கள் குறித்து விவாதிக்க வேண்டி இருப்பதால், வெறும் 8 நாட்கள் போதாது. மக்கள் பிரச்சினையில் அக்கறை இல்லாமல், பெயருக்கு சட்டசபை கூட்டத்தை நடத்துவது போல் தெரிகிறது. சில மக்கள் விரோத அவசர சட்டங்களை விவாதம் நடத்தாமல் நிறைவேற்ற அரசு முயற்சி செய்வது, மக்களுக்கு செய்யும் துரோகம். இந்த விஷயத்தில் அரசு, அரசியல் அமைப்புக்கு எதிராக நடந்து கொள்கிறது.

கர்நாடக சட்டசபை நடவடிக்கைகள் தொடர்பான சட்டத்தின்படி சட்டசபை கூட்டத்தை ஆண்டுக்கு 60 நாட்கள் நடத்த வேண்டும். ஆண்டுக்கு 4 முறை சட்டசபையை கூட்ட வேண்டும்.

ஆனால் பா.ஜனதா அரசு இந்த சட்டமன்ற நடைமுறையை தொடர்ந்து சீர்குலைத்து வருகிறது. அதனால் சட்டசபை கூட்டத்தை 3 வாரங்கள் அதாவது அக்டோபர் 15-ந் தேதி வரை நீட்டிக்க வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

மேலும் செய்திகள்