மாவட்டம் முழுவதும் பலத்த மழை மின்னல் தாக்கி - என்ஜினீயரிங் மாணவர் பலி

கடலூர் மாவட்டம் முழுவதும் நேற்று பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் என்ஜினீயரிங் மாணவர் பலியானார்.

Update: 2020-09-10 00:23 GMT
கடலூர்,

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் கடலோர மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

நேற்றும் காலை முதல் மாலை வரை வெயில் சுட்டெரித்தது. இதனால் வெயிலின் தாக்கத்தால் பெரும்பாலான பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். இந்த நிலையில் மாலை 4 மணி அளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து, குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. இதற்கிடையே மாலை 4.45 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல இடி-மின்னலுடன் பலத்த மழையாக கொட்டியது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. அதன் பிறகு தூறிக்கொண்டே இருந்தது.

திடீரென பெய்த மழையால் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் நனைந்தபடி சென்றதை காண முடிந்தது. மேலும் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர், தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கியது. கடலூரில் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.

மேலும் பல இடங்களில் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டதால், கழிவுநீர் மழைநீருடன் கலந்து சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

இதேபோல் நேற்று மாலை பண்ருட்டி பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் பஸ் நிலையத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. இதனால் பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் பல்வேறு வீடுகளையும் மழைநீர் சூழ்ந்தது. இதேபோல் சிதம்பரம், விருத்தாசலம், நெல்லிக்குப்பம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

இந்நிலையில் மின்னல் தாக்கியதில் என்ஜினீயரிங் மாணவர் ஒருவர் பலியானார். அதுபற்றிய விவரம் வருமாறு:-

புதுப்பேட்டை அருகே உள்ள நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் கமலக்கண்ணன் (வயது 21). இவர் டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இறுதியாண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை கமலக்கண்ணன், அதே பகுதியில் உள்ள நிலத்தில் தனது மாடுகளை மேய்த்துவிட்டு, வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் கமலக்கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான கமலக்கண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்னல் தாக்கி என்ஜினீயரிங் மாணவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்