தண்ணீர் லாரி மோதி 5 வயது சிறுவன் பலி சிறுமி உள்பட 4 பேர் படுகாயம்; டிரைவர் கைது

சென்னை பட்டினப்பாக்கத்தில் மாநகராட்சி ஒப்பந்த தண்ணீர் லாரி மோதி 5 வயது சிறுவன் உயிரிழந்தான். மேலும் சிறுமி உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2020-09-11 23:18 GMT
சென்னை,

சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகர் 10-வது தெருவை சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத் (வயது 35). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி மரியோலா நிஷா (30). ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு பிரனீஷ் லியாம் (5), பிரதீஷா (4) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை ராஜேந்திர பிரசாத்தின் தாயார் உமா, சிகிச்சைக்காக தரமணியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது ராஜேந்திர பிரசாத்தின் குழந்தைகள் இருவரும், பாட்டியுடன் ஸ்கூட்டரில் செல்வோம் என அடம் பிடித்தனர்.

தாறுமாறாக ஓடிய லாரி

இதையடுத்து உமா மற்றும் அவரது பேரக்குழந்தைகள் 3 பேரும் அவர்களது உறவினரான கோபால் என்பவருடன் ஸ்கூட்டரில் எண்ணூரில் இருந்து தரமணியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றனர். பட்டினப்பாக்கம் எஸ்.சி.பி. சிக்னல் அருகே வந்து கொண்டிருக்கும் போது, அதே வழியாக பின்னால் சாலையில் தாறுமாறாக வந்து கொண்டிருந்த மாநகராட்சி ஒப்பந்த தண்ணீர் லாரி ஸ்கூட்டர் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு 4 பேரும் சாலையில் விழுந்தனர். இதில் சிறுவன் பிரனீஷ் லியாம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தான். மற்ற 3 பேரும் படுகாயம் அடைந்தனர். மேலும் லாரி மோதியதில் இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த, கொடுங்கையூர் எழில்நகரை சேர்ந்த ரமேஷ் (32) என்பவர் காயம் அடைந்தார்.

டிரைவர் கைது

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் காயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த சிறுவனின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தண்ணீர் லாரி ஓட்டி வந்த பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தை சேர்ந்த டிரைவர் சமீர் (24) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் லாரி பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்து மொபட் மீது மோதியது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்